வங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்

வங்கிக் கணக்குகள், காப்பீட்டுத் திட்டங்கள், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் உள்ளிட்ட வற்றில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.22 ஆயிரம் கோடி முடங்கியுள்ளது என்கிற செய்தி யாரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கும்.

அதாவது இத்தொகைக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் இத்தொகை கேட்பாரற்று முடங்கி கிடக்கிறது.
இவ்வாறு கேட்பாரற்று முடங்கிக் கிடப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பை மறந்திருத்தல், இறந்து போகுதல், வாரிசுகளுக்கு பெற்றோர் மேற்கொண்ட முதலீடுகள் குறித்து எதுவும் தெரியாதிருத்தல் உள்ளிட்ட காரணங்களால் பணம் முடங்கிப் போய் உள்ளது. இத்தொகை யாருக்கும் பயன்படாமல் முடங்கி இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

மனைவியிடம் கூட சிலர் தங்கள்  முதலீடுகள் குறித்து கூறுவதில்லை. இந்த நிலை மாறுவதற்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது அவசியம்.  முதலீடு குறித்த தகவலை மனைவி, குடும்ப நண்பர், குடும்ப வழக்கறிஞர் என  யாரிடமாவது தெரிவிப்பது மிகவும் நல்லது.

கடன் பத்தி ரங்கள், பங்குகள் வாங்கியிருக்கும் சிலர் அவற்றை வாங்கியது குறித்து ஞாபகமே இல்லாமல் இருக்கிறார்கள் என்கிற செய்தியும்  நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. இன்றைக்கு அந்த முதலீடு  பல மடங்கு பெருகியிருக்கக் கூடும்.

இவ்வாறு மறந்து போய் இருப்பவர்கள் பங்கு ஆவணங்களை தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்ப  டீமேட் எனப்படும் மின்னணு பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது அப்பங்குகளின் இன்றைய மதிப்பிற்கு தொகையை பெறலாம்.

இதே போல வங்கிகளில் சேமிப்பு கணக்கை துவங்கி விட்டு வங்கிப் பக்கம் போகாதவர்கள் பலர் உள்ளனர்.  இவர்கள் வங்கியில் செய்த டெபாசிட் வட்டியுடன் சேர்ந்து பெருகி இருக்கும். இவர்கள் வங்கிக் கணக்கை பராமரிக்க விரும்பவில்லையெனில் அத்தொகையை டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து நல்ல லாபம் பெறலாம்.
ரிசர்வ் வங்கியின் அறிக்கைப் படி இந்திய வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கணக்கில் கேட்பாரற்று கிடக்கும் தொகை ரூ.1739 கோடி. இதில் சேமிப்பு கணக்கின் மதிப்பு ரூ.995 கோடி, நடப்புக் கணக்கின் மதிப்பு ரூ. 150 கோடி.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை  முதலீடு செய்வது மிகவும் நல்ல காரியம்தான். ஆனால் முதலீடு செய்த பணத்தை மறந்து போவது சரியான காரியமல்ல. மேலும் முதலீடு செய்த தகவலை உரியவர்களிடம் சொல்லி வைப்பதும் அவசியத் தேவையாகும்

பாண்டியன்

 

Issues: