மத்திய நிதிக் குழு பரிந்துரை: பாதிப்புக்குள்ளாகும் தமிழகம்!

மத்திய அரசின் வரி வருவாயை, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதை வரையறுப்பதற்காக, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட மத்திய நிதிக் குழு, தனது அறிக்கையில், மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக புதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் அம்சங்கள் பின்வருமாறு:
மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதால் அவை சுயமாக செயல்பட வழியேற்படும். மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த இத்தகைய கூடுதல் நிதி உதவியாக இருக்கும்.
நிதிப் பகிர்வு நடவடிக்கையால், மாநில அரசுகள் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் செயல்படும். இதனால் மத்திய அரசின் சுமையும் குறையும். அனைத்து நிதி தேவைகளும் வரி வருவாய் மூலம் பங்கீடு செய்யலாம்.
கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராம ஒன்றியங்களுக்கு, அடிப்படை ஒதுக்கீடு மற்றும் அவற்றின் செயல்பாட்டின் அடிப் படையிலான ஒதுக்கீடு என இரண்டு வகையாக அளிக்கலாம். இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டு வரை பஞ்சாயத்து அமைப்புகளுக்குக் கிடைக்கும் ஒதுக்கீடு ரூ.2.88 லட்சம் கோடியாக இருக்கும்.
மத்திய அரசு சார்ந்த திட்டங்களில் 30 திட்டங்களை மாநிலங்களுக்கு மாற்றலாம்.
இவை தவிர சரக்கு சேவை வரி, பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் உபயோகிக்கும் பொருள்களுக் கான கட்டண நிர்ணயம், பொதுத்துறை நிறுவன செயல்பாடு ஆகியவற்றை உரிய கால இடைவெளியில் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.
இவ்விதம் அதிக அளவு வரி வருவாய் பகிர்வு உயர்த்தப்படுவதால் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி கிடைக்கும். இதற்கு முன்பெல்லாம், நிதிக் குழு வழக்கமாக ஒரு சதவீதம் அல்லது 2 சதவீத அளவுக்குத்தான் வரி வருவாய் பகிர்வை உயர்த்தும்.
இப்போது 10 சதவீத உயர்வுக்கு பரிந்துரைக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிதிக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அதிகரிக்கப்பட்டதின் காரணமாக, 2015&-16-ம் நிதி ஆண்டில் மாநில அரசுகளுக்கு கிடைக்கும் அளவு ரூ. 5.26 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2014-&15-ம் நிதி ஆண்டில் மாநில அரசு களுக்கு கிடைத்த வரி வருவாய் பங்கு அளவு ரூ. 3.48 லட்சம் கோடி மட்டுமே.
மாநிலங்களுக்கு அளிக்கும் பகிர்வுத் தொகை 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்ட போதிலும், தமிழகத்துக்கு கடந்த ஆண்டை விட நிதி ஒதுக்கீடு குறையும் என தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே ரூ. 2 லட்சம் கோடி கடன் சுமையால் உள்ள தமிழக அரசுக்கு இது மேலும் சுமையாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய தேவையில்லை.
இந்த நிதியை, பகிர்தலில் பின்பற்றப்படும் விதிமுறை காரணமாக தமிழக அரசுக்கான ஒதுக்கீடு குறைந்துள்ளது.
மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் அதாவது 1971-ம் ஆண்டு நிலவரப்படி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வரையறை நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பு அடிப்படையிலேயே, 42 சதவிகித நிதியை பிரித்தளிக்க வேண்டும் என நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனால், தமிழகத்துக்கு கூடுதல் நிதி கிடைக்காது. இந்த அடிப்படையில் சேவை வரி தவிர்த்த வரி வருமானத்தில் தமிழகத்திற்கு 4 சதவீதமும், சேவை வரி வருமானத்தில் 4 சதவீதமும் கிடைக்கும்.
14-ஆவது நிதிக் குழு பரிந்துரையின்படி, தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணா மலை, நாகை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சி நிதியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இங்கு செயல்படுத்தப்பட்டு வந்த வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
14-வது நிதிக்குழு தனது பரிந்துரையில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 17.5 சதவீதத்தை அளிக்கலாம் என்றும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 10 சதவீதத்தை அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இதன்படி பிஹார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்.
மாநிலத்தின் வேளாண் உற்பத்தி, தொழில் உற்பத்தி, சேவைத் துறை வளர்ச்சி, தனி நபர் வருமானம் போன் றவற்றின் அடிப்படை யிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தமிழகத்துக்கு பாதகமாக அமைந்து விட்டது.
நிதிக்குழு பரிந்துரை யால் கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கும் என்றிருந்த நிலை மாறி, கடந்த ஆண்டை விட குறையும் என்பது தமிழகத்துக்கு பேரிடியாகத்தான் இருக்கும்.
ஏற்கெனவே ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் சுமை உள்ள நிலையில் வரி பங்கும் குறைவது தமிழகத்தின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேக மில்லை.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று,கூடுதல் நிதி தேவை என்பதை வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தின் சிறப்புத் திட்டங்களையும், தனிப்பட்ட சூழ்நிலைகளையும் கவனத்தில் கொள்ளமால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழகம் பாதிக்கக்கூடிய ஒரு பரிந்துரையை நிதிக்குழு வழங்கியிருப்பது சரியானது அல்ல என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கருத்தாகும்.

கார்த்திக்

Issues: