ரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின்நிலையம் அமைப்பதற்கான பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை இறக்குவதற்காக உடன்குடி அருகே புதிய துறைமுகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இத்திட்டத்திற்கென ரு.1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை செயல்படுத்தும் பணியில் மின்சார வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணிக்கான முதல் கட்ட ஆய்வுகள் முடிவடைந்துவிட்டன. இந்த பணியை விரைவாக முடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
துறைமுகம் அமைக்கப்படுவதால் உடன்குடி அருகே உள்ள திருச்செந்தூர், நாங்குநேரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வேலைவாய்ப்பு அதிகரித்து, பொருளாதார நிலை உயரும் என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். மேலும் ரியல் எஸ்டேட் துறையும் அப்பகுதியில் எழுச்சி பெறும்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கடந்த 2006 ம் ஆண்டு அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் தேவையான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், நிலக்கரி போன்ற பிரச்சனைகளால் திட்டம் கிடப்பில் இருந்தது.
பின்னர் 2007ம் ஆண்டு அக்டோபரில் பாரத மிகு மின் நிலையத்துக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் இடையே 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து 2008ம் ஆண்டு, உடன்குடி மின் கழகம் என்ற ஒரு கூட்டு நிறுவனம் ஏற்படுத்தப் பட்டது. இதன்படி 8000 கோடி மதிப்பீட்டில், கடன் மற்றும் பங்கு மூலதன தொகையை உள்ளடக்கிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.
இதன்படி பங்கு மூலதனத் தொகையில் 26 சதவீதம் மின்சார வாரியமும், 26 சதவீதம் பாரத மிகுமின் நிறுவனமும், 48 சதவீதம் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரும் தனியார் நிறுவனமும் வழங்கும் என, முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன், மின்சார வாரியம் மூலமாக மாநில அரசின் திட்டமாகவே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்துக்கான மொத்த செலவினமான ரூ.8,000 கோடியையும் தமிழக அரசே, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பங்கு மூலதனமாக வழங்கவும் முடிவு செய்யப் பட்டது.
மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகமோ இத்திட்டத்துக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வில்லை. எனினும் இத்திட்டத்துக்கு தேவையான நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இப்போது மத்திய அரசு நிலக்கரியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில்தான் அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை இறக்குவதற்காக உடன்குடி அருகே ரு.1,600 கோடி மதிப்பீட்டில் புதிய துறைமுகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
இதன்படி, கடற்கரையில் இருந்து நடுக்கடல் வரை 7 கிலோ மீட்டர் தூரத்தில் நிலக்கரியை கையாளும் வகையில் எந்திரங்கள் நிறுவப்பட உள்ளது.
80 ஆயிரம் டன் நிலக்கரியை கொண்டுவரும் கப்பலில் இருந்து, நிலக்கரியை இறக்கும் வகையில் இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்தப்பகுதியில் போதிய ஆழம் இருப்பதால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை என்பது முக்கியமான சிறப்பம்சம்.
தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி, கிழக்கு பிராந்திய மாநிலங்களில் உள்ள “ஈஸ்டன் கோல் பீல்டு லிமிடெட்” என்ற மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அத்துடன் இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது.
கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரி, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹால்டா, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள வடசென்னை, வல்லூர் அனல் மின்நிலையம், மேட்டூர் அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கும், தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கும் கொண்டு வரப்படுகிறது.
இதில் மேட்டூர் அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரி எண்ணூரில் இருந்து ரெயில்கள் மூலமாகவும், வல்லூர் அனல்மின்நிலையத்துக்கு கண்வேயர் பெல்ட் மூலமாகவும் கொண்டு செல்லப்படுகிறது.
உடன்குடி அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரி, உடன்குடி அருகே அமைக்கப்படும் புதிய துறைமுகம் மூலம் கொண்டு செல்லப்படும் என்பதால் தூத்துக்குடி துறைமுகத்தை பயன்படுத்த தேவையிருக்காது. இதனால் பெருமளவு செலவும், நேரமும் மிச்சமாகும் என்பது முக்கியமான சிறப்பம்சமாகும்.
மேலும்,உடன்குடி அனல் மின் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்துவதால், இந்த திட்டத்துக்கு பெரு மின் திட்ட தகுதி சான்றிதழ் கிடைக்கும்.
இந்த தகுதியின் அடிப்படையில், வரி விலக்குகள் கிடைக்கும். இதனால் திட்ட செலவுகள் குறைவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்ப்பபடும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே கிடைக்க வழிவகை ஏற்படும் என ஏற்கனவே தமிழக அரசு கூறியுள்ளது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

கண்ணன்

Issues: