ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழி வகுக்குமா பட்ஜெட் ? வியிதி. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன்

ஓர் அரசு தொடர்ந்து எந்த திசையில் செல்லவிருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துவது பட்ஜெட் எனப்படும் நிதிநிலை அறிக்கைதான். அந்தவகையில் தனது முதல் நிதிநிலை அறிக்கையை மோடி தலைமையிலான பாஜக அரசின் நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கிறார்.
இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும், இந்தியப் பொருளாதரத்தின் நம்பகத்தன்மை உலக அரங்கில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இவரது கூற்றை தொழில்துறையினர் பலர் ஆமோதித்துள்ளதாகவே தெரிகிறது.
பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லியபடியே அரசின் செலவுகளைக் குறைத்து, முடிந்த வரை நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த மத்தியஅரசு முயன்று இருக்கிறது.
நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த போது இந்தியாவுக்குள்ள சவால்களையும் பட்டியலிட்டார்.
=விவசாயத் துறை வருமானத்தை பெருக்குவது
=கட்டுமான துறையில் முதலீட்டை அதிகரிப்பது
=உற்பத்தித் துறையின் சரிவை தடுப்பது
=நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீரமைப்பது
=அதிக அளவில் நிதி முதலீட்டை ஈர்க்க கூடுதல் கவனம் செலுத்துவது
இந்த 5 விசயங்களையும் சவாலாக எடுத்துக்கொண்டு இவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு தீவிரமாக செயல்படும் என அருண்ஜெட்லி சொல்லி இருப்பது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மேலும் முக்கிய சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார்.
=ஜன் தன் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதில் 12.5 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
= நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள மாநிலங்கள் பயனடையும் வகையில் ஏல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
=தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014&-15ல் 50
லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.
நிதி அமைச்சர் சொன்னது போல நிச்சயமாக இது சாதனைதான்.தூய்மை இந்தியா திட்டத்தில் கவனம் செலுத்தும் மத்திய அரசு, சுகாதார துறைக்கு போதுமான நிதி ஒதுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.வரி ஏய்ப்பு செய்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
நமது நாட்டு மக்கள் தொகையில், மிகமிக குறைவானவர்களே வருமான வரி செலுத்தி வருகிறார்கள். இதற்கு காரணம் விழிப்புணர்வு இல்லாததுதான். இந்நிலையில் கடுமையான நடவடிக்கை பயன் தருமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
நடுத்தர வகுப்பு மக்கள், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கும் என மிகுந்த நம்பிக்கையோடு காத்திருந்தனர்.ஆனால் உச்சவரம்பு அதிகரிக்கப் படவில்லை. பழைய உச்சவரம்பு நிலையே தொடரும் என அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
அதேவேளையில், வருமான வரி கட்டுபவர்களுக்கு ரூ.4,44,200வரை வரிச் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பின்வருமாறு:
=மருத்துவ காப்பீடு வரி சலுகைக்கான வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக அதிகரிப்பு.
=மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வரி சலுகைக்கான வரம்பு ரூ.30,000 ஆக அதிகரிப்பு.
=தூய்மை இந்தியா, தூய்மை கங்கா திட்டத்துக்கு நிதியளிப்பவர்களுக்கு 100% வரி விலக்கு.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கும் என மிகுந்த நம்பிக்கையோடு காத்திருந்த மக்களுக்கு இந்த வரிச்சலுகைதான் ஓரளவு ஆறுதல் தந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்காக பல அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தன.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் மருத்துவ நிலையம் தொடங் கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
இதுவரை அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்காத நிலையில், மீண்டும் அதே அறிவிப்பு செய்யப்பட் டுள்ளது.
அதேபோல சென்னை கே.கே. நகரில் ரூ.180 கோடியில் 200 படுக்கைகளுடன் முதியோர் மருத்துவமனை தொடங்கப்படும் என்று கடந்த முறை அறிவிக்கப்பட்டிருந்தது.அதற்கான நடவடிக்கை குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்படாதது ஏமாற்றத்தை தருகிறது.
மதுரை&தூத்துக்குடி மற்றும் சென்னை& - பெங்களூரு தொழில் போக்குவரத்து பாதை திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட வில்லை.
பொன்னேரியில் ஸ்மார்ட் நகரம் அமைப்பதற்கு மாஸ்டர் பிளான் விரைவில் தயாரிக்கப்படும் என்று, கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த இந்த நிதிநிலை அறிக்கையில் அதற்கான நடவடிக்கை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
உலக பாரம்பரிய சின்னங்களுக்கான நிதிஉதவி திட்டத்தில், தமிழகத்தில் உள்ள உலக கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் சேர்க்கப்படாதது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் தேசிய திறன் இயக்கம் துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இந்த இயக்கம் செயல்படும்.
இந்த இயக்கம் பல்வேறு அமைச்சகங்கள் எடுத்துவரும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும். இதன் மூலம் 31 துறைகளில் உள்ள திறன் மேம்பாட்டு மன்றங்களின் தரத்தை அரசு உயர்த்த முடியும்.
மேலும் இந்த இயக்கத்தின் மூலமாக தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கும் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.மொத்த மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ள நமது நாட்டுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி,மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.
நிறுவன வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்ததை முன்னிட்டு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசு என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது அர்த்தம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசுக்கு கிடைக்கும் மொத்த வரி வருவாயில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் கிடைப்பது 30 சதவீதம் ஆகும். வேலை வாய்ப்புகளை வாரி வழங்குவதும் கார்ப்பரேட் நிறுவனங்களே. இந்நிலையில் வரியை கொஞ்சம் குறைக்கும்போது புதிய நிறுவனங்களை தொடங்க கார்ப்பரேட்டுகள் முன்வருவார்கள்.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி, நுகர்வு அதிகரிப்பதோடு வரிவருவாயும் அதிகரிக்கும்.எனவே கார்ப்பரேட் நிறுவன வரிக்குறைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கதே.
கடந்த 2013&-14-ல் மானியத்தொகை ரூ. 2.55 லட்சம் கோடியாக இருந்தது. இதனை 2014-&15-ல் ரூ. 2.67 லட்சம் கோடியாக உயர்த்தப் பட்டது.தற்போது 2015-&16-ல் ரூ. 2.44 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
அரசின் இந்த போக்கு, மானியங்களை படிப்படியாக கட்டுப்படுத்தி முழுமையாக ஒழித்து விடுமோ என்ற அச்சத்தை ஏழை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.
மானியங்கள் தவறானவர்களுக்கு போவதை தடுத்து நிறுத்த வேண்டு மென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தை ரத்து செய்யக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
சேவை வரியை 12.34 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்திருப்பது விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது.இதனால் பாதிக்கப்படுவது சாதாரணமக்களும், நடுத்தர மக்களும் தான்.
நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.5 விழுக்காடு என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இலக்கு அடையபட்டால்,சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இந்தியா முந்தும்.
புதிதாக தொழில் தொடங்குபவருக்கு உதவி வழங்க “சேது” என்றழைக்கப்படும் சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயன்பாட்டு அமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இது விரைவாக அமல்படுத்தப்பட்டால், சுயதொழில் செய்ய இன்னும் ஏராளமானோர் முன்வருவர்.
தகவல்தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெற ஏழை, நடுத்தரக் குடும்பத்து இளைஞர்களுக்கான கடன் வழங்கும் திட்டம் வரவேற்கக்கூடியது. அனைத்துத் துறைகளுக்கும் இதை விரிவுபடுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
சிறு&குறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் வகையில் புதிதாக முத்ரா வங்கிகள் உருவாக்க ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு, சிறு- குறு தொழில்கள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு வழிவகுக்கும்.
வறுமைக் கோட்டுக் கீழ் இருக்கும் முதியோர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறப்பட்டுள்ளது. இவர்கள் ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு பிரிமீயமாக ரூ.1 செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான காப்பீட்டை பெற முடியும் என்ற அறிவிப்பு முதியோர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே பிரிமீயம் செலுத்தி, ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான விபத்து காப்பீட்டை பெறும் திட்டமும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் எனலாம்.
வரும் நிதியாண்டில் ‘சூப்பர்-ரிச் வரி’ அமல் படுத்தப்படுகிறது. ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் இந்த வரியை செலுத்த வேண்டியிருக்கும். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 60 சதவீத வேலைவாய்ப்பை வழங்கும் விவசாய துறைக்கு இந்த ஒதுக்கீடு போதுமானதாக இருக்காது. விவசாய துறையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
கிராமப்புற உள் கட்டமைப்பை மேம்படுத்த 2015-&16 நிதியாண்டில் ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பும்,டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி செய்து தரப்படும் என்ற அறிவிப்பும், கிராம வாழ்க்கையின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கு உதவும்.
2022-ல் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் படி, கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும், நகர்ப்புறங்களில் 5 கோடி வீடுகளும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சொந்த வீட்டுக்கனவு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டுமானதுறை எழுச்சி பெறுவதோடு இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களையும், அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று கூறியுள்ளது.தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.34,699 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை பாஜக அரசு நிறுத்தி விடுமோ என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்த ஊரக பகுதி மக்களுக்கு,அரசின் அறிவிப்பு ஆறுதலை தந்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்துக்காக மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
செல்வ வரி மற்றும் வங்கிகளின் வாராக்கடன் வசூல் இலக்கை எட்ட முயற்சிக்காமல், நிதி ஆதாரங்களைத் திரட்ட பொதுத்துறைப் பங்குகள் விற்பனையை ஊக்குவிப்பது சரியான நடவடிக்கை அல்ல என்ற எதிர்கட்சிகளின் விமர்சனத்தை மத்தியஅரசு கவனத்தில் கொள்வது அவசியம்.
திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் செயல்திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிதிட்டத்தில் சேருவது கட்டாயம் என்பதை, தொழிலாளர்களின் விருப்ப உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில், பட்ஜெட்டில் சில பாதகமான அம்சங்கள் இருந்தாலும், நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பல சாதகமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது.

Issues: