பின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..

தமிழக அரசு சிட்கோ என்று அழைக்கப்படுகிற தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தை 1971ல் தொடங்கியது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், சிறு தொழில்களை வளர்த்து எடுக்கவும் தொடங்கப்பட்ட இந்த சிட்கோவின் பணி மகத்தானது.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் பேட்டையை அமைத்து ஏராளமான தொழில் நிறுவனங்கள் உருவாக காரணமாக அமைந்ததே இந்த சிட்கோதான். இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை சிட்கோ செய்து தருகிறது. பலவிதமான தொழிற்சாலைகளை ஒரே இடத்தில் அமைப்பதற்கு ஏற்ப இடங்களைத் தேர்வுசெய்யும் பணியை சிட்கோ சிறப்பாக மேற்கொண்டதால்தான் பல்வேறு சிறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின.
இடங்களை தேர்வு செய்வதோடு, அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்க வழி செய்தல், தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளையும் சிட்கோ மேற்கொள்கிறது.
தொழிற்பேட்டை அமையும் பகுதிகளில், தொழில் முனைவோர் கொடுக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் கட்டிடத்தை அமைத்து ஒதுக்கி தருகிறது சிட்கோ. நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்படும்.
இட வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன் விண்ணப்பிப்பவரின் தேவையையும், கருத்தையும் கேட்ட பிறகே கட்டிடம் அமைத்து தரப்படுகிறது. ஒரு தொழில் முனைவோர் உரிய தகுதியை பெற்றிருந்தால் தொழிற்பேட்டையில் இடத்தை வாங்கி தொழிற்சாலையை தொடங்க முடியும்.
தொழிற்சாலைகளுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்று மூலப்பொருட்கள். இவற்றை உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கும் பணியையும் சிட்கோ மேற்கொள்கிறது. இதற்காக மூலப்பொருட்களை சந்தையில் இருந்து சிட்கோ கொள்முதல் செய்கிறது.
தொழிற்பேட்டையில் உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பதற்கான சந்தையை உருவாக்கும் பணியையும் சிட்கோ மேற்கொள்கிறது. இது தொழில் முனைவோருக்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது.
தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக தொழில் முனைவோர்களுக்கு அடிக்கடி கருத்தரங்குகளை நடத்தும் சிட்கோ ஏற்றுமதி சார்ந்த தொழில்களை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனது இணையதள சேவை மூலம் பொருட்களை காட்சிப்படுத்தி சிட்கோ விற்பனையை மேற்கொள்வதால் தொழில் முனைவோர்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க முடிகிறது.
தொழிற்பேட்டையில் தொழிலைத் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது. நிறுவனங்களின் இயந்திரம் மற்றும் திட்ட மதிப்பில் 25 சதவீதம் வரை அரசால் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 30 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது போல சிட்கோவின் தொழிற்பேட்டைகளும், பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ்கின்றன.
தமிழகத்தில் 76 தொழிற்பேட்டைகள் உள்ளன. இதில் 36 தொழிற்பேட்டைகளை தமிழக அரசே நேரடியாக தொடங்கியது. சிட்கோ 44 தொழிற்பேட்டைகளை உருவாக்கியது. இந்த தொழிற்பேட்டைகள், வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டன. பிறகு அந்த பகுதிகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்தன.
இந்த 76 தொழிற்பேட்டைகளில் இயங்கும், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
சாதாரண தொழில் முனைவோர்களாக தொழிற்பேட்டையில் தொழில் தொடங்கியவர்கள் இன்றைக்கு மாபெரும் தொழில் அதிபர்களாகவும் உயர்ந்திருக்கிறார்கள்.
இவர்கள் தங்களது வருமானத்தை தொடர்ந்து புதிய தொழில்களில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாகவும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கிறது.
புதிய தொழில் முனைவோர்கள் சிட்கோவின் தொழிற்பேட்டைகளில் தொழில்களை ஆரம்பித்தால் நன்றாக சம்பாதிப்பதோடு மேன்மேலும் வளர முடியும்.

Issues: