பணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’
மாத வருமான திட்டம் என்று அழைக்கப்படும் (MIP) ஹைப்ரிட் பிளான் இந்தியாவில் அதிகளவில் பிரபலமாகவில்லை எனினும், இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் நிதி அனைத்தும் நிதி நிறுவனங்களிலும், வங்கி நிறுவனங்களிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மாத வருமானமாக வழங்கப்படுகிறது.
மாத வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும். இந்த மாத வருமான திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. நிபுணத்துவத்தோடு செயல்படும் நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்து வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி வருமானத்தை அளித்து வருகின்றன. அவ்வாறு வருமானம் அளிக்கின்ற சில நிறுவனங்கள் குறித்து பார்ப்போம்:
ரிலையன்ஸ் நிறுவனம் தனது மாத வருமான திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 23 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இந்நிறுவனம், வசூலிக்கும் தொகையை அரசு பத்திரங்களில் முதலீடு செய்து வருகிறது.
பிராங்க்ளின் இந்தியா என்ற நிறுவனம் தனது மாத வருமான திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சென்ற வருடம் 22 சதவீத வருமானத்தை தந்துள்ளது. இந்நிறுவனம் வசூலிக்கும் தொகையை அரசு பத்திரங்களிலும், பங்கு சந்தைகளிலும் முதலீடு செய்கிறது. கிடைக்கும் வருமானத்தை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா, எஸ்பிஐ மேக்னம் என்ற பெயரில் மாத வருமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிடைக்கும் மூலதனத்தை வங்கி பத்திரங்களிலும், பங்கு சந்தையிலும் முதலீடு செய்கிறது. கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு 17 சதவீத வருமானத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான பிர்லா சன் லைப் நிறுவனம் தனது மாத வருமான திட்டத்தின் மூலம் கடந்த வருடம் 19 சதவீத வருமானத்தை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. இந்நிறுவன திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000த்திலிருந்து முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கனரா வங்கி தனது மாத வருமான திட்டத்தை கனரா ரோபிகோ என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது. கிடைக்கும் முதலீட்டை அரசு பத்திரங்களிலும், தனியார் வங்கிகளிலும், பங்கு சந்தையிலும் முதலீடு செய்கிறது. கடந்த வருடம் இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.
ஐடிஎஃப்சி நிறுவனம் தனது மாத வருமான திட்டத்தில் கிடைக்கும் நிதியை ரியல்எஸ்டேட் நிறுவன பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்கிறது. மேலும், வங்கி சார்ந்த பங்குகளிலும், தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளிலும் முதலீடு செய்கிறது. கடந்த வருடம் தனது வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.
பொதுவாக அஞ்சலகங்களிலும், வங்கிகளிலும் செய்யப்படும் முதலீட்டிற்கு 8 முதல் 9 சதவீத வட்டி கிடைக்கிறது. மேற்சொன்ன திட்டங்களில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்சம் 20 சதவீதம் வருமானம் வரும். எனினும் இந்த வருமானம் நிச்சயம் என்று சொல்ல முடியாது.
இந்நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்கின்றன. பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தால் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அப்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் பெருமளவு குறையும். அல்லது நஷ்டமடையவும் வாய்ப்பு உண்டு. எனவே எச்சரிக்கையோடு செயல்படுவது அவசியம்.