மாற்றுப்பாதையில் விரைவில் செயல்படுத்தப்படுமா சேது சமுத்திர திட்டம்?
சேது சமுத்திர திட்டம், மாற்றுப்பாதையில் செயல்படுத்தப் படும் என்று தற்போதைய பாஜக அரசு கூறி வருவதை பல தரப்பினரும் வரவேற்கிறார்கள்.
சேது சமுத்திர திட்டம் 150 ஆண்டு கால கனவு திட்டமாகும். சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்... சேதுவை மேடுறுட்டி வீதி சமைப்போம்....... என்று பாடினான் புரட்சி கவி பாரதி.
இத்தகைய கனவுத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் நடைமுறைக்கு வந்தது. ஆனால் சில மதவாத சக்திகள் கோர்ட்டுக்கு சென்று இத்திட்டத்துக்கு தடையாணை வாங்கிவிட்டன.
இத்திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று தென்மாவட்ட மக்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏராளமான நன்மைகள் தமிழகத்துக்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
7,517 கிலோ மீட்டர் கடற்பரப்பை கொண்ட நம் பகுதியில் 12 பெரிய துறைமுகங்களும், 185 சிறிய துறைமுகங்களும் உள்ளன. ஆனால் இந்தியாவின் எந்தவொரு பகுதியில் இருந்தும், மற்ற பகுதிகளுக்கு கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையை கடந்து தான் செல்ல வேண்டும்.
இதற்கு இலங்கைகக்கு கப்பம் கட்ட வேண்டி இருப்பதோடு நேர விரயமும் ஆகிறது. இதையெல்லாம் யோசித்த நமது முன்னோர்கள் ஆய்வு செய்து சேது சமுத்திர திட்ட வடிவத்தை உருவாக்கினர்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சேது சமுத்திர திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 2005ம் ஆண்டு ஜூலை 2ந்தேதி சேதுசமுத்திர திட்டத்திற்கான துவக்க விழா நடைபெற்றது. பணிகளும் துவக்கி வைக்கப்பட்டன.
தமிழர்களெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்தனர். தென்தமிழகம் இனி வளர்ச்சியடைந்து வேலைவாய்ப்பு பெருகும் என்று ஆர்வத்தோடு இருந்தனர். 60 சதவித பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தை நீதிமன்றத்தை நாடி மதவாத சக்திகள் நிறுத்தி வைத்தனர்.
இத்திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் நம்நாட்டு கப்பல்களும், பிற நாட்டு கப்பல்களும் வீணாக இலங்கையை கடந்து செல்ல வேண்டியது இருக்காது. சுமார் 424 கடல் மைல் தொலைவு மிச்சமாகும். சுமார் 36 மணி நேரம் வரை பயண நேரம் குறையும்.
இதனால் எரிபொருள் மிச்சமாகும். கப்பல் நிறுவனங்கள் சுலபமாக ஏற்றுமதி இறக்குமதியை மேற்கொள்ளலாம். கடலோர மாவட்டங்கள் முன்னேறும்.
உலகத்தரம் வாய்ந்த ஏற்றுமதியாளர்கள் உருவாவார்கள்.இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் பல சிறிய துறைமுகங்கள் உருவாகும். மீனவர்கள் நேரடி லாபம் பெறும் வாய்ப்பு உண்டாகும்.
எனவே மத்தியஅரசு கூறியதுபோல, இத்திட்டத்தை தாமதப்படுத்தாமல், உடனடியாக மாற்றுப்பாதையில் செயல்படுத்திட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு.
சேகர்