பெட்ரோல் செலவு இனி இல்லை.... வருகிறது.. சோலார் ஸ்கூட்டர்!

உலக அளவில் பெட்ரோல் - டீசலின் விலை குறைந்து வந்தாலும் இது தொடராது என்றே பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். எனவேதான் மாற்று எரிசக்திக்கு அனைத்து நாடுகளுமே ஊக்கம் கொடுத்து வருகின்றன.
வாகன போக்குவரத்து மிகவும் அதிகரித்து விட்ட நிலையில், இனியும் பெட்ரோல் &- டீசலை மட்டும் முழுமையாக நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்த இந்திய அரசும், பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது.
இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
இரண்டு சக்கர வாகனங்களை பொறுத்த வரையில் இந்தியாவில் ஏழைமக்களும், நடுத்தர மக்களும்தான் அதிக அளவில் பயன்படுத்து கின்றனர். இவர்கள் பெட்ரோலுக்காக மட்டும் கணிசமான தொகையை செலவிடுகிறார்கள்.
இந்நிலையில் மின்சாரத்தால் இயங்கும் பேட்டரி வாகனங்கள் வரத்தொடங்கிய போது நடுத்தர மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் மின்சாரத்தால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் வாங்கி பயன்படுத்த முடியவில்லை.
ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால் குறைந்த தூரமே வாகனம் ஓடும். பிறகு 6 மணி நேரம் சார்ஜ் செய்த பிறகே அந்த வாகனத்தை ஓட்ட முடியும் என்பது அதில் உள்ள பலவீனமான அம்சம்.
இதற்கு மாற்றாக தற்போது சூரிய ஒளியால் இயங்கும் பேட்டரி வாகனங்கள் வர இருக்கின்றன. இந்த செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.
இந்தியா ஒரு வெப்ப நாடு என்பது நமக்கு தெரியும். ஆண்டு முழுவதும் வெப்பம் இருந்து கொண்டே இருக்கும். எனவே சூரிய மின்னாற்றலில் இயங்கும் வாகனங்கள் மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.
இத்தகைய வாகனங்கள் இந்திய சாலைகளில் விரைவில் வலம் வர இருக்கின்றன. சென்னையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள்தான் இத்தகைய வாகனங்களை உருவாக்கி உள்ளார்கள் என்பது நாமெல்லாம் பெருமை படக்கூடிய விசயம்.
மூன்று மாணவர்கள் இணைந்து சுமார் மூன்று ஆண்டுகள் தீவிரமாக உழைத்து, சோலார் ஸ்கூட்டர்களை வடிவமைத்து உள்ளனர். முழுக்க முழுக்க சூரிய ஒளியால் இயங்கும் அந்த சோலார் ஸ்கூட்டரில் நிறைய புதிய அம்சங்கள் உள்ளன.
இந்த சோலார் ஸ்கூட்டரில் சூரிய ஒளியை உள்வாங்குவதற்காக மேற்புறத்தில் பேனல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேட்டரிகள் கொண்ட இந்த ஸ்கூட்டரில், வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும்போது ஒரு பேட்டரி ஒளியை உள்வாங்கி சார்ஜ் செய்துகொள்ளும். மற்றொரு பேட்டரி, ஸ்கூட்டர் சாலையில் ஓட ஆரம்பித்த பின்னர் ஒளியை உள் வாங்கி மின்சாரமாக சேமிக்கும். பேட்டரிகளை மட்டும் தனியே எடுத்து மின்சாரம் மூலம் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் இதில் உண்டு.
இந்த வசதி, மழை மற்றும் பனி காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும். மூன்று முதல் நான்கு மணி நேரம் சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் பயணம் செய்ய முடியும்.
இந்த சோலார் ஸ்கூட்டர், பயணத்தின்போதும் சார்ஜ் ஆகும் என்பதுதான் ஹைலைட்டான விசயம். ஒரு மணி நேரத்துக்கு 50 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.
மேலும் 250 கிலோ வரை எடை தாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதுமையான சோலார் ஸ்கூட்டர் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறகு சந்தைக்கு வரும். ரூ.40 ஆயிரம் விலையில் இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்ய அந்த மாணவர்களால் திட்டமிடப்பட்டுள்ளது.
இது போன்ற புதுமையான முயற்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஊக்கம் தர வேண்டும். புதுமை முயற்சிகளுக்கு மானியம், கடன் உள்ளிட்ட சலுகைளை அரசு, தாராளமாக வழங்க வேண்டும்.

Issues: