ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஐடி நிறுவனங்கள்...அச்சத்தில் உறையும் பணியாளர்கள்!

ஐடி துறையில் இந்தியா முழுவதும் சுமார் 32 லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.இன்றைய நிலையில் அனைத்து ஊழியர்களுமே அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.எந்த நேரத்தில் வேலை பறிபோகுமோ என்ற கவலை இவர்களை வாட்டி வதைக்கிறது. ஏனெனில் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
ஐடி துறையில் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் நிறுவனம், இந்தியாவில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 1.65 லட்சம் என்ற அளவில் இருந்து 1 லட்சமாக குறைக்க முடிவு செய்துள்ளது.
2011ம் ஆண்டு இந்நிறுவனத்தின் மூத்த பணியாளர்களை நிலைத்திருக்க செய்ய, நிறுவனத்தின் பங்குகளை அவர்களுக்கு வாரி வழங்கிய நிலையில், இன்றைக்கு லாபவிகிதத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ஐடி துறையில் இந்திய அளவில் அதிக வருமானம் ஈட்டி வரும் டிசிஎஸ் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.சுமார் 30ஆயிரம் பணியாளர்களை நீக்க திட்டமிட்டு, அதன்படி தனது பணியாளர்களை நீக்கி வருகிறது.
2013-&14ம் நிதி ஆண்டில் டி.சி.எஸ்-ஸின் மொத்த ஆண்டு வருவாய் 81,809 கோடி ரூபாய். இது முந்தைய நிதி ஆண்டைவிட 37.7 சதவிகிதம் அதிகம். 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதக் கணக்குப்படி இந்தியா முழுவதும் டி.சி.எஸ்-ஸில் பணிபுரிகிறவர்களின் எண்ணிக்கை 3,13,757 பேர்.
இவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்பட்ட தொகை, 26,148 கோடி ரூபாய். இந்த ஊதியம், வரி இவை போக நிறுவனத்தின் மொத்த லாபம் 19,331 கோடி ரூபாய். இந்நிலையில் மேலும் லாபத்தை அதிகரித்துக்கொள்ள ஆட்குறைப்பு நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
அரசு வேலையைவிட அற்புதம், நல்ல சம்பளம், பணிப் பாதுகாப்பு போன்ற காரணங்களை முன்வைத்து, ஐடி துறை ஒரு சொர்க்கபுரி என்று நிலவி வந்த எண்ணம் தற்போது அடியோடு தகர்ந்திருக்கிறது.
நிறுவன சீரமைப்பு என்ற பெயரில் நடைபெறும் இந்த வேலை பறிப்புக்கு, அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் முதல் இலக்காகி இருகிறார்கள். சுமார் ஏழு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை அனுபவம்கொண்ட அசிஸ்டென்ட் கன்சல்டன்ட் , அஸோசியேட் கன்சல்டன்ட் பதவிகளில் இருக்கும் பெரும்பாலான ஊழியர்கள் இப்போது வெளியில் அனுப்பப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் அதிக ஊதியம் பெறுபவர்கள்.மாதம் ரூ 1 லட்சத்துக்கும் மேல் ஊதியம் பெறும் இவர்களை அனுப்பிவிட்டு குறைந்த ஊதியத்துக்குப் புதிய பணியாளர்களை நியமித்து வருகிறது.
நிறுவனத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு திறன்மிக்கவர்கள் என, நிறுவனத்தாலேயே சான்று அளிக்கப்பட்ட அவர்கள், இப்போது அதே நிறுவனத்தால் திறனற்றவர்கள் என, முத்திரை குத்தப்பட்டு வெளியேற் றப்படுகின்றனர்.
வேலை இல்லாத பொறியாளர்கள் லட்சக்கணக்கில் வெளியே காத்திருக்கும் நிலையில், அதிக சம்பளம் கொடுத்து சீனியர்களை வேலைக்கு வைத்திருப்பது அவசியமற்றது என கருதி , நிறுவனத்தின் லாபம் குறையாதபோதும் ஊழியர்களை வேலையைவிட்டுத் தூக்குகின்றனர்.
டி.சி.எஸ் நிறுவனத்தை தொடர்ந்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் 50,000 பேரை வெளியேற்றப் போவதாக விப்ரோ நிறுவனமும் அறிவித்துள்ளது.
இந்திய இளைஞர்களின் கனவுலகமாக இருந்த ஐ.டி துறை, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சரியத் தொடங்கிவிட்டது. எனினும், இப்போது அது ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
மற்ற துறைகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் ஐடி துறை அளவுக்கு இல்லை. இந்நிலை மாறவேண்டுமெனில், தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியை மத்தியஅரசு கைவிடவேண்டும். பணியாளர் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதநேயம்,சமூகஉணர்வு இவற்றை பன்னாட்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பின்பற்றவேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் திடீரென வேலையிழப்புக்கு ஆளாகும் நபர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குவது அவசியமாகும்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்றபோதிலும் வேலைவாய்ப்புக்கான போட்டியும் அதிகரித்துள்ளது. எனவே தகுதியும், திறமையும்தான் பணிவாய்ப்பையோ அல்லது மாற்றுப்பணி வாய்ப்பையோ ஏற்படுத்தி தரும்.
தொழில் அனுபவமும் தகுதியும் கொண்டவர்களுக்கு எளிதில் மாற்றுவேலை கிடைத்துவிடும். அனுபவம் இல்லாதவர்களுக்குத்தான் மாற்றுவேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இவர்கள் குறிப்பிடத்தக்க தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இவர்களுக்கு சுயதொழில் மேற்கொள்வதில் ஆர்வம் இருந்தால் அதில் ஈடுபடலாம்.
செய்தித்தாள் களிலும், இணையதளங்களிலும் வேலைவாய்ப்புத் தகவல்கள் நிறைய வருகின்றன. பணிதேடுபவர்கள் அதை பயன் படுத்திக்கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு தொடர்பிலேயே இருந்தால் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில், உங்களுக்கு தகுந்த வேலை கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
மாற்றுப்பணியில் சேருவதற்கு உங்களுக்கு கூடுதல் திறமை தேவையெனில் அதற்குரிய பயிற்சியையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட சில துறைகளில் குறுகியகால பயிற்சி பெற்றவர்களுக்கான பணிவாய்ப்பும், சுயதொழில்வாய்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.இந்த வாய்ப்பையும் மாற்றுப்பணி தேடுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றை கற்றுக்கொள்வது எளிது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் தொடங்குவதற்கு புதிய நிறுவனங்கள் வந்து கொண்டே இருப்பதால், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே எதிர்காலமே இருண்டுவிட்டது என வேலை பறிபோனவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப, உரிய புது நிறுவனங்களை நாடி பணிவாய்ப்பை பெறலாம்.
எந்த வேலையில் சேர்ந்தாலும் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஒருவேளை பணி பறிபோனால் இந்த சேமிப்பு உங்களுக்கு கைகொடுக்கும்.
மேற்சொன்ன ஆலோசனைகளை பின்பற்றும் நபர்கள், வேலைஇழப்பினால் சந்திக்கும் பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
சீனிவாசன்

Issues: