குல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்
விண்வெளி ஆய்வில்அமெரிக்கா, ரஷியா போன்ற
நாடுகள்தான் கோலோச்சி கொண்டிருந்தன. தற்போது இந்தியாவும் அந்நாடுகளுக்கு சவால் விடும் வகையில் விண்வெளி ஆய்வில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு ஹாலிவுட் படம் எடுக்கும் செலவில் செவ்வாய் கிரகத்துக்கே விண்கலத்தை அனுப்பிய நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது நாமெல்லாம் பெருமை படக்கூடிய விசயம். விரைவில் நிலவுக்கும், செவ்வாய்கிரகத்துக்கும் மனிதனை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது.
இந்த பணிகளையெல்லாம் சிறப்பாக செய்துகொண்டிருப்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமாகும். இது சுருக்கமாக இஸ்ரோ என்று அழைக்கப்படுகிறது.
ராக்கெட்டுகளை வடிவமைத்தல், செயற்கை கோள்களை தயாரித்து விண்ணுக்கு அனுப்புதல் போன்ற பணிகளை செய்து வரும் இந்த ஆய்வு மையத்திற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் 3–வது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படும் என்று முந்தைய மன்மோகன்சிங் தலைமையிலான அரசு முடிவெடுத்திருந்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பொது மக்களும் அரசின் இந்த முடிவிற்கு மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தெற்கே கடற்கரை ஓரத்தில் அதாவது கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் குலசேகரப்பட்டினம்.
இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சிறப்பு காரணங்கள் உண்டு. இந்தியாவை பொறுத்தவரை ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு கிழக்கு கடற்கரை பகுதிதான் பொருத்தமான இடம். செயற்கை கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகள் கிழக்கு நோக்கி அனுப்பப்படுவதே இதற்கு காரணம்.
ராக்கெட் உயரத்தை நோக்கி கிளம்பும் போது ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அது வெடிக்ககூடும் அல்லது நிலப்பகுதியை நோக்கி திசை மாறகூடும்.
இது போன்ற நெருக்கடியான சமயங்களில் விண்வெளி மைய விஞ்ஞானிகள், தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பொத்தானை அழுத்தி நடுவானில் ராக்கெட்டை அழித்து விடுவார்கள்.
அசம்பாவிதங்கள் ஏற்படும் சமயங்களில் ராக்கெட் கடலில் விழுந்தால்தான் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது போன்ற அசம்பாவிதங்கள் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலும் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
எனவேதான், ராக்கெட் ஏவுதளம் அமைக்க வங்ககடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டது.எனினும் ஸ்ரீஹரிகோட்டாவை விட ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு குலசேகரப்பட்டினம் மிகவும் பொருத்தமான இடம் என்பது வல்லுனர்களின் கருத்து.
அனைத்து செயற்கைகோள்களும் விண்வெளியில் பூமத்திய ரேகைக்கு மேலேயே நிலை நிறுத்தப்படுகின்றன.
இதற்காக விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைகோளுடன் ஏவும் ராக்கெட்டுகளை விண்வெளியில் சிறிது தூரம் கிழக்கு நோக்கி செலுத்தி, பின்னர் தெற்கு நோக்கி செலுத்துகிறார்கள். இலங்கையின் மீது ராக்கெட் பறக்காமல் இருப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
ஏனெனில் சர்வதேச விதிகளின் படி ஒரு நாட்டின் ராக்கெட் மற்றொரு நாட்டின் மீது பறக்கக்கூடாது . இது கூடுதல் எரிபொருள் செலவிற்கு வழிவகுக்கிறது.
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை அனுப்பினால் இந்த பிரச்சினையே கிடையாது. நேராக தெற்கு நோக்கி விண்ணில் செலுத்தி விடலாம்.
இதனால் எரிபொருள் செலவு குறைவதோடு, கூடுதல் எடைகொண்ட செயற்கை கோள்களையும் ராக்கெட் மூலம் செலுத்த முடியும். ஏனெனில் குலசேகரப்பட்டினம் , ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் அமைந்துள்ளது. ராக்கெட்டை செலுத்தும் நேரமும் குறையும். 4 அடுக்கு ராக்கெட்டுக்கு பதிலாக 3 அடுக்கு ராக்கெட்டினைக் கொண்டே அதன் பணிகளை செய்து முடிக்கலாம்.
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இடத்தில் இருந்து ராக்கெட்டை செலுத்தும் போது ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும். அந்த இடத்தில் பூமியின் சுழற்சி வேகம் அதிகமாக
இருப்பதால், அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு தானாகவே கூடுதல் உந்து சக்தி கிடைக்கும்.
ராக்கெட் என்ஜின்களை வடிவமைத்தல், சோதனை ஓட்டம் போன்ற பல முக்கியமான பணிகள் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்க திட்ட மையத்தில் நடைபெறுகின்றன.
இந்த மகேந்திரகிரி, குலசேகரப்பட்டினத்துக்கு மிக அருகில் உள்ளது மிகவும் சாதகமான அம்சம் ஆகும். இங்குதான் இந்திய விஞ்ஞானிகளால் கிரையோஜெனிக் எந்திரம் தயாரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது என்பது முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.
ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகளை மேற்கொள்ளும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள திருவனந்தபுரமும் குலசேகரப்பட்டினத்துக்கு அருகில் தான் உள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைத்தால், ஸ்ரீஹரிகோட்டாவின் முக்கியத்துவம் குறைந்து போகும் என்ற அச்சம் ஆந்திராவில் உள்ளது.
இதனால் ஆந்திர அரசியல்வாதிகள் புதிய ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவிலேயே அமைக்க லாபி செய்து வருகின்றனர். மேலும் இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள 7 பேரில் 4 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவில் ஒருவர் மட்டுமே தமிழர். இஸ்ரோவைப் பொறுத்தவரை குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைவதையே விரும்புகிறது.
பூகோள ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியிலும் மிகவும் பொருத்தமான இடம் குலசேகரப்பட்டினம் என்பதால்தான் இஸ்ரோ இந்த பகுதியை விரும்புகிறது. பூகம்பம், பயங்கர புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களையும் தாங்கும் வல்லமை குலசேகரப்பட்டினத்திற்கு உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் 2 வெவ்வேறு இடங்களில் தான் ராக்கெட் ஏவுதளங்கள் அமைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கெனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
எனவே 3&வது ஏவுதளம் அமைப்பதற்கு குலசேகரப்பட்டினம்தான் சரியான தேர்வு என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
அவ்வாறு ராக்கெட் ஏவுதளம் அமைந்தால், அந்த பகுதியில் வேலைவாய்ப்பு பெருகுவதோடு அப்பகுதி மக்கள் வேறு நகரங்களுக்கு குடிபெயர்வது தடுக்கப்படும்.
மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள நிலங்களின் மதிப்பு பன்மடங்கு உயரும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.