சாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்!- சிறப்பு கட்டுரை
பில்கேட்ஸ்... இந்தப் பெயரை உச்சரிக்காத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்தவர். பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே முதல் நிலை பணக்காரராக உயர முடியும் என்ற எண்ணத்தை உடைத்தெரிந்த மாபெரும் மனிதர் இவர்.
1955ல் அமெரிக்காவில் சியாடில் என்ற நகரில், வில்லியம் ஹென்றி -& மேரி தம்பதியருக்கு பிறந்தவர் பில்கேட்ஸ். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர். தாயார் ஓர் ஆசிரியை.
13 வயதிலேயே கம்ப்யூட்டர் ஆர்வம் பில்கேட்சுக்குள் புகுந்து விட்டது. பள்ளியில் படிக்கும்போது அங்கு இருக்கும் கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அவற்றை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
அப்போது திறமையான கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அப்பள்ளியில் கிடையாது. இருப்பினும் ஆசிரியர்களே வியக்கும் வகையில், தனது 16 வயதிலேயே கம்ப்யூட்டர் குறித்த பரந்த அறிவை வளர்த்துக் கொண்டார் பில்கேட்ஸ். கம்ப்யூட்டர் குறித்த தொழில்நுட்ப நூல்களை எல்லாம் தேடித்தேடி வாங்கி ஆர்வமாக படித்தார்.
இந்நிலையில் அவருடைய நண்பர் பால்ஆலனுடன் சேர்ந்து ஒரு சிறிய கம்ப்யூட்டர் குழுவை துவக்கினார்.
அவர் வசித்த பகுதிகளில் இருந்த நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களுக்கு தனது குழுவின் மூலம் புரோகிராம் எழுதி கொடுத்து சம்பாதித்தார். 16 வயதிலேயே சம்பாதிக்க வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு எழுந்தது வாழ்வின் ஒரு முக்கிய தருணம் என்று சொல்ல வேண்டும்.
இப்படித்தான் அவரது கம்ப்யூட்டர் வாழ்வு தொடங்கியது. கம்ப்யூட்டர், புரோகிராமிங், வருமானம் என்பதிலேயே அவரது கவனம் முழுவதும் குவிந்தது. அரட்டை அடித்துக்கொண்டு வீணாக பொழுதை கழிக்கும் இளைஞர்கள் மத்தியில், சம்பாதித்து கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பது குறித்து எண்ணுவதில் பில்கேட்ஸ் தனது பொழுதைப் போக்கினார்.
பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரி படிப்பை தொடர்வதற்கு ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அவரது மனம் படிப்பின் மீது குவிய வில்லை. எப்போதும் பிசினஸ் குறித்தே அவரது மனம் சுழன்று கொண்டிருந்தது. முதல் வருடம் முடிந்தவுடனேயே கல்லூரி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
‘உன்னை வக்கீலாக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டோமே... பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டாயே... உன் எதிர்காலம் என்னாவது? உன்னால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? என்றெல்லாம் பெற்றோரும், உறவினர்களும் பில்கேட்சை திட்டினர்.
பில்கேட்சின் மனமோ அந்த வார்த்தைகளை கேட்டு கலங்கவில்லை. மாறாக தன்னால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்று தன்னம்பிக்கையோடு அவர்களுக்கு பதிலளித்தார்.
1974ம் ஆண்டு இன்டெல் நிறுவனம் புதிய மைக்ரோ புராசசரை அறிமுகம் செய்தது. அதன் புரோகிராமிங் பணிக்கு பில்கேட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார். அதன் பயனாக பேசிக் முறையில் எளிதாக புரோகிராமிங் எழுதிக்கொடுத்து நிறுவனத்தின் பாராட்டை பெற்றார். அப்போது பில்கேட்சுக்கு வயது இருபது.
பின்னர், 1977ல் தனது நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை, ஆல்புகர்க் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 8வது மாடியில் உள்ள சிறிய அறையில் தொடங்கினார். இவ்வாறு தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம்தான் இன்று உலகமே வியக்கும் அளவுக்கு மாபெரும் உச்சத்தை தொட்டிருக்கிறது.
70களில் அமெரிக்காவில் தொடங்கிய கம்ப்யூட்டர் புரட்சி 80களில் உலகளவில் விரிவடைந்தது. அமெரிக்க நிறுவனங்கள் இந்த புரட்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. அப்படி பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்களில் மைக்ரோசாப்ட்டும் ஒன்று.
80களில் ஐபிஎம் நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர்களை உருவாக்கத்தொடங்கியது. அதுவரை நிறுவனங்கள் மட்டுமே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது. பெர்சனல் கம்ப்யூட்டர் வருகைக்கு பிறகு அந்த நிலை மாறியது. கம்ப்யூட்டர்கள், உலகம் முழுவதும் பெருமளவில் விற்பனையாக தொடங்கின.
குறிப்பாக ஐபிஎம் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. அந்த காலகட்டத்தில் உலகளவில் இந்நிறுவனம் அதிக கம்ப்யூட்டர்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய புகழ்பெற்ற நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கைகோர்க்க வைத்தார் பில்கேட்ஸ்.
ஐபிஎம் கம்ப்யூட்டர்களுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடைய துவங்கியது. பெரும்பாலானோர் ஐபிஎம் கம்ப்யூட்டரிலிருந்து ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு மாறத் தொடங்கினர். இச்சமயத்தில் பில்கேட்ஸ் விரைவாக செயல்பட்டு மைக்ரோ சாப்ட் விண்டோஸ் என்ற இயங்கு தளத்தை அறிமுகம் செய்தார்.
அது மாபெரும் வெற்றியை பெற்றது. ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் இயங்கு தளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் மைக்ரோசாப்ட்டுக்கு கிடைத்தது. இதனால் பில்கேட்சுக்கு கோடிகோடியாய் கொட்டத்தொடங்கியது. இன்றைக்கு உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் இயங்குதளம்தான் 80 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய புதிய மென்பொருள்களை அப்போது மட்டுமல்ல இப்போதும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது மைக்ரோசாப்ட்.
90களில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணைய செயலியை உருவாக்கி அதை புதிய கம்யூட்டர் வாங்குவோருக்கு இலவசமாக வினியோகம் செய்தார் பில்கேட்ஸ். இதன் காரணமாக அப்போது பிரபலமாக இருந்த நெட்கேப்சின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது. இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மேலும் ஒரு மைல்கல்லாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அமைந்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே இளைஞர்கள். இவர்களின் திறமைகளை பில்கேட்ஸ் நன்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தார். திறமையானவர்களுக்கு உரிய கவுரவம் கொடுத்தார். இந்த அம்சத்தை கேள்விப்பட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தேடிவந்து பல திறமைசாலிகள் இணைந்தனர்.
இன்றளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் இந்தியாவிலிருந்து சென்றவர்கள். இதில் 26 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான விஷயம் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையும் கூட.
தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவரவர் திறமைக்கு ஏற்ப ஊக்குவிப்பு பரிசுகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் போன்றவற்றை வழங்கினார். இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
முதலாளி, தொழிலாளி, நிர்வாகி என்ற வேறுபாடுகளை ஒருபோதும் பில்கேட்ஸ் தனது நிறுவனத்தில் காட்ட வில்லை. ஊழியர்களுடன் நெருக்கமாக பழகினார். எல்லோரும் கலந்து பழகி, கருத்துகளை பகிர்ந்து, ஆலோசனை வழங்க கூடிய ஒரு சூழலை உருவாக்கினார்.
பில்கேட்ஸ் நினைத்திருந்தால் உலகின் பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்க முடியும். ஆனால் அவரோ தனது நிறுவனத்தில் பணியாற்றி, நிறுவனத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட மெலின்டர் பிரெஞ்ச் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1994ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. 96ல் ஒரு மகளும், 99ல் ஒரு மகனும், அதற்கு அடுத்தாண்டு ஒரு மகளும் இவர்களுக்கு பிறந்தனர்.
1999ல் தனது அனுபவங்ளை எல்லாம் திரட்டிBusiness at the speed of thought
என்ற நூலை எழுதி வெளியிட்டார். தொழில் முனைவோர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் அந்த நூல் மாபெரும் வரவேற்பை பெற்றது.
சுமார் 30 மொழிகளில் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. இதன் மூலம் இந்நூல் எவ்வளவு வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
The Road Ahead என்ற நூலையும் எழுதி இருக்கிறார். இந்த இரண்டு நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழுத் தொகையையும் சமூக சேவைக்கு வழங்கி வருகிறார்.
அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் சமுக சேவை செய்து வரும் பில்கேட்ஸ் இதுவரை சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை சமூக பணிகளுக்கு வழங்கி இருக்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடி ஆகும். கிட்டதட்ட தனது சொத்தில் பாதியை சமூக சேவைகளுக்கு வழங்கி இருக்கிறார்.
இவ்வளவு நன்கொடைகளை வாரி வழங்கிய பின்னரும் இன்றும் உலகின் நெம்பர்1 பணக்காரர் பில்கேட்ஸ்தான். இந்த இமாலய வெற்றியை, நிறுவனம் ஆரம்பித்து 20 ஆண்டுகளிலேயே அடைந்தார் என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விசயம். இந்த அபார வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்து பில்கேட்சிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில் இதுதான்:
“எனது வெற்றி வரலாற்றுக்கு ஐந்து விசயங்கள் அடிப்படையாக அமைந்தன.
ஆர்வம்: எனக்கு கம்ப்யூட்டரில் அணையா ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் இன்றுவரை குறையாமல் இருப்பதால்தான் ஈடுபாட்டோடு வேலை பார்க்க முடிகிறது. தொடர்ந்து வெற்றியை ஈட்டமுடிகிறது.
புத்திசாலித்தனம்: எதிராளியை குறைத்து மதிப்பிடாமல் அவனை வெல்வது எப்படி என்று யோசித்தாலே புத்திசாலித்தனம் வந்துவிடும்.
உண்மையான உழைப்பு: நம்முடைய உழைப்பு உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். கடமைக்கு உழைத்தால் எந்தப் பலனும் இருக்காது. வெற்றி பெற வேண்டும், பெயர், புகழ், பணம் கிடைக்க வேண்டும் என முனைப்போடு தொழில் புரிபவர்களால்தான் வெற்றி காண முடியும்.
ல்ல குழு: பள்ளியில் படிக்கும் போதே நல்ல குழு இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பதை அறிந்து கொண்டேன். அதனால்தான் எனது முயற்சிகள் எல்லாவற்றிலும் என் நண்பர்களை இணைத்துக் கொண்டேன். நிறுவனத்திலும் சிறந்த தொழில்நுட்பம் தெரிந்த ஆட்களையே பணிக்குச் சேர்த்துக் கொண்டேன். கெட்டிக்கார குழு அமைந்தால்தான் வெற்றி கிடைக்கும்.
தலைமை: ஓர் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், அதன் தலைமை ஆகும். கெட்டிக்கார குழு இருந்தாலும் அதனை வழி நடத்த திறமையான, செயல்திறன் கொண்ட தலைவன் இல்லாவிடில் வெற்றி கிடைக்காது”
இவ்வாறு தனது வெற்றிக்கான காரணங்களை அடுக்கும் பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவன பொறுப்பிலிருந்து விலகி, முழு மனதோடு சமூக சேவை ஆற்றும் பணியை தனது அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார்.
சாப்ட்வேர் துறையில் ஒரு தனி சாம்ராஜியத்தையே படைத்த ஒரு மாபெரும் மனிதர் பில்கேட்ஸ். ஆனால் அவர் அடக்கத்துடன் பின் வருமாறு கூறுகிறார்:
“நான் சாப்ட்வேர் பாதையில் சென்ற தூரம் சொற்பமானது. ஆனால் செல்ல வேண்டிய தூரமோ மிக அதிகமானது’’