டிரேட் மார்க் பெறுவது அவசியமா?

தொழிலை நடத்துவோருக்கு டிரேட் மார்க் பெறுவது மிக முக்கியமானதாகும். ஒரு நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு டிரேட் மார்க் அவசியமானதாக கருதப்படுகிறது.
பொருளோ,சேவையோ மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறும் போது அதற்கான முழு உரிமையும் அதன் நிறுவனத்தை சார்ந்தது என்பதை உணர்த்துவதுதான் இந்த டிரேட் மார்க். வார்த்தை, லோகோ, லேபிள் என எதுவாக வேண்டுமானாலும் இந்த டிரேட் மார்க் இருக்கலாம்.
இந்தியர்கள், ஒவ்வொரு நாட்டிலும் டிரேட் மார்க் பதிவு செய்து கொள்வதற்கு தனித்தனியாக விண்ணப்பிப்பதுடன், கட்டணமும் செலுத்தும் வகையில் முன்பு நடைமுறை இருந்தது. இந்த நடைமுறையை மாற்றுவதற்காக, ஒரே விண்ணப்பத்தின் மூலம் உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில்,டிரேட் மார்க் பதிவு செய்யும் சட்டத் திருத்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மக்களவையில் நிறைவேறியது.
இதனால் இந்தியர்கள், ஒரே விண்ணப்பத்தில் ஒரு முறை மட்டும் கட்டணம் செலுத்தி, எல்லா நாடுகளிலும் செல்லுபடியாகும் வகையில் டிரேட் மார்க்கை பெற முடியும். இதற்கு முன் இருந்த டிரேட் மார்க் சட்டப்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட டிரேட் மார்க், மற்ற நாடுகளில் செல்லாது.
இந்த சட்டத் திருத்தத்திற்கு அடிப்படையாக அமைந்தது மேட்ரிட் ஒப்பந்த்தம் ஆகும். சர்வதேச டிரேட் மார்க் விதிமுறைகளை உண்டாக்க உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் 2007 ம் ஆண்டு இந்த மேட்ரிட் ஒப்பந்த்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவும் கையொப்பமிட்டது.
இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட டிரேட் மார்க்கிற்கு மற்ற நாடுகளிலும் பாதுகாப்பு வழங்கப்படும். இதே போல் மற்ற வெளிநாட்டு நிறுவனங்களின் டிரேட் மார்க்குகளையும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஒப்பந்தம்தான் மேற்சொன்ன சட்ட திருத்தத்திற்கு வழி வகுத்தது.
காப்புரிமைக்கும் டிரேட் மார்க்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு. மனிதனின் சிந்தனை, கண்டுபிடிப்பு இவை மற்றவர்களுக்கு உபயோகப்படும் வகையில் அமைவதற்காக பெறப்படுவது காப்புரிமை. ஆங்கிலத்தில் இது பேட்டன்ட் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவரின் கண்டுபிடிப்பு, மற்றவர்களால் காப்பியடிக்கப் படுவதையும், உரிமை கொண் டாடப்படுவதையும் தடுக்க முடியும்.
காப்புரிமையை அறிவுசார் சொத்துரிமை என்றும் அழைக்க லாம். ஆங்கிலத்தில் இது இன் டிலக்ச்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ் என அழைக்கப்படுகிறது. இயந்திரம், வழிமுறை, உற்பத்தி செய்யும் முறை, நிர்வகிக்கும் முறை என, முதன் முதலாக கண்டுபிடிப்பது இன்வென்ஷன் ஆகும். ஏற்கனவே கண்டுபிடித்த பொருட்களில், புதிய முறையை புகுத்துவது இன்னோவேஷன் ஆகும்.
இவ்விரண்டிற்கும் காப்புரிமை கிடைக்கும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது சற்று சிரமமான காரியம் என்றாலும் கூடுதல் முயற்சியால் கண்டிப்பாக பெறலாம். இதற்கான அலுவலகம் சென்னை, கிண்டியில் உள்ளது. இந்த காப்புரிமை நிறுவனத்திடம் விண்ணப்பித்து, பதிவு செய்து காப்புரிமையை பெறலாம்.
டிரேட் மார்க் இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது. உற்பத்தி பொருள், சேவை இவற்றின் பெயர் மற்றும் குறிகளுக்கு பெறுவது டிரேட் மார்க். கதை, கருத்து, சாப்ட்வேர் போன்ற படைப்புகளுக்கு பெறுவது காப்பிரைட்ஸ் ஆகும். டிரேட் மார்க் பெறுவதால் நிறுவனருக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். டிரேட் மார்க் பெற்றவரின் பெயரில் வேறு யாராவது தொழில் தொடங்கி னாலோ அல்லது போலியாக பொருளை தயாரித்தாலோ உரிமைமீறல் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெறலாம்.
மேலும் அந்த நிறுவனத்தின் மீது தடை உத்தரவும் வாங்கலாம். சட்ட வழக்குகளை கையாள டிரேட் மார்க் சான்றிதழ் கைவசம் இருக்க வேண்டும்.
இந்த டிரேட் மார்க் சான்றிதழைப் பெறுவதற்கான அலுவலகமும் சென்னை, கிண்டியில்தான் உள்ளது. டிரேட் மார்க்கை குறிப்பிட்ட பிரிவில் பதிவு செய்ய 3500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
பதிவு செய்த பிறகு அந்த டிரேட் மார்க்கை உபயோகப்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஒரு பொருளுக்கோ, சேவைக்கோ வைக்க விரும்பும் டிரேட் மார்க்கை யாரும் பயன்படுத்தாமல் இருப்பது, டிரேட் மார்க் பதிவு செய்வதற்கான முக்கிய நிபந்தனையாகும்.
www.ipindiaonline.gov.in என்ற இணையதளத்திற்கு சென்றால் ஏற்கனவே பதிவு பெற்ற டிரேட் மார்க்குகளை காணமுடியும்.
டிரேட் மார்க் சான்றிதழுக்காக கொடுக்கப்படும் விண்ணப்பம் மூன்று வகைகளில் பரீசீலிக்கப்படுகிறது.
உற்பத்தி பொருள் அல்லது சேவை, டிரேட் மார்க் வாங்கும் அளவுக்கு தனித்துவம் பெற்றிருக்க வேண்டும்.
கேட்கப்படும் டிரேட் மார்க் வேறு நிறுவனங்கள் வைத்திருக்கக்கூடாது.
கேட்கப்படும் டிரேட் மார்க்கானது உற்பத்தி பொருளின் தரத்தையோ அல்லது அதன் பெயரையோ குறிக்கும் படி அமைய வேண்டும்.
இம்மூன்றும் சரிவர அமைந்தால் ஒரு வருடத்தில் டிரேட் மார்க் சான்றிதழ் கைவசம் வரும்.
போட்டிமயமான தொழில் துறையில் பொருள் அல்லது சேவையின் தரத்தை நிலை நாட்ட டிரேட் மார்க் அவசியமாகிறது. அதேபோல பொருளின் உரிமையை ஒருவர் தன்வசமே வைத்துக்கொள்வதற்கும் இந்த டிரேட் மார்க் அவசியமாகிறது.

ரமேஷ்

Issues: