குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்

தமிழகம் தனது மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் கிடைக்க இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தியாகும். இது திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஒரு அரும் பெரும் செய்தி.
சுமார் 20,000 கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வர உள்ளது. கூடங்குளம் மின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், வளமான பகுதியாகவும், கூடங்குளம் வலிமையான பகுதியாகவும் ஆகும். அதை சுற்றியுள்ள தூத்துக்குடி , நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகள் மேலும் வலிமை பெறும்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் சிலரால் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் கொஞ்சமும் உண்மையில்லை.
அதிநவீன தொழில் நுட்பத்தில் பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வி.வி.ஈ.ஆர்., ரக அணு உலைகளே கூடங்குளத்தில் நிறுவப்படுகின்றன.
சுனாமி நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ளும் அளவுக்கு அணுமின் நிலையத்தில் தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சுற்றுச் சூழலையும், மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே அணு தொழில்நுட்ப பொறியியல் வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பல்வேறு பாதுகாப்பு முறைகளைக் கொண்ட அணு உலைகளை வடிவமைத்திருக்கின்றனர்.
உலகிலுள்ள தொழில் நுட்பத்துறைகளிலேயே மிகவும் அதிக கவனத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் வகையிலும் செயல்படும் துறை ஒன்று என்றால் அது அணுசக்தி தொழில்நுட்ப துறைதான்.
ரஷ்யாவின் உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் தற்கால தொழில் நுட்பங்களைக் கொண்ட, அதிநவீன அணு உலைகளாகும்.
அரசின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்திய அணுசக்திப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஆணையம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது.
இதுவரை கூடங்குளம் பகுதி, மிகவும் பின்தங்கியதாக இருந்தது. சரியான போக்குவரத்து வசதி கூட இல்லாத பகுதியாக திகழ்ந்தது. இன்று அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றிருக்கிறது. இதற்கு காரணம் கூடங்குளம் அணுமின்நிலையம்தான்.
மின் உற்பத்திக்கு தேவைப்படும் பொருட்கள் பற்றாக் குறையாக உள்ள இக்காலகட்டத்தில், அணுசக்தி மூலம் இதனை சரிக்கட்ட முடியும் என்ற விஞ்ஞானிகளின் கூற்றை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மற்ற எந்த மின்சாரத்தையும்விட அணுமின்சாரத்தை தயாரிக்க ஆகும் செலவுதான் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Issues: