விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் மக்கள்... பிரச்சனை தீர என்ன செய்யலாம்?

இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால் தனது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோத னையை இந்தியா நடத்திய போது, இந்தியா மீது பொருளாதாரத் தடையை சில நாடுகள் விதித்தன. எனினும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும்  வலிமை இருந்ததால் அத்தடையைக் கண்டு இந்தியா அஞ்சத்தேவையில்லா மல் போனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விவைவாசி உயர்வு தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்சனையால் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாய நாடான இந்தியாவில் இப்பிரச்சனை ஏற்பட என்ன காரணம்? அவற்றுக்குத் தீர்வுகாண என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்.
பொருளாதாரத்துறையில்  ஞிணிவிகிழிஞி கிழிஞி ஷிஹிறிறிலிசீ (தேவையும், வழங்கலும்)என்ற சொல் முக்கியமான ஒன்று. ஒரு பொருளுக்கு தேவை அதிகரித்து  தட்டுப்பாடும் அதிகரித்தால் விலை உயரும். தேவை குறைந்து பொருள் கிடைப்பது எளிதானால் விலை சரியும்.

தற்போது விலைவாசி உயர இந்நிலையும் ஒரு காரணமாகும். மக்கள் தொகை அதிகரித்து வருவதால், உணவுத் தேவை அதிகரித்துள்ளது. அதேசமயம் விவசாயப் பணிகளின் மீது மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது. வேறு பணிகளுக்கு செல்வதை அவர்கள் விரும்புகின்றனர். மேலும் தொழிற்சாலைகள், பொருளாதார மண்டலங்கள் இவற்றின் பெருக்கத்தால் விவசாய நிலப்பகுதிகள் குறைந்து விட்டன.இதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி கணிசமான அளவிற்கு குறைந்துவிட்டது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்கும். எனவே உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், உணவுப்பொருட்கள் வீணாகும் வழிகளை அறிந்து தடுக்கவும், பாதுகாக்கவும், பராமரிக்கவும் உரிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். 
அதேபோல வேளாண் நிலங்களை பாதுகாக்கவும், வேளாண் தொழிலை ஊக்கப்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும் நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் விலைவாசி உயர்வை கணிசமான அளவிற்கு கட்டுப்படுத்தி விட முடியும்.

2050-ஆம் ஆண்டில் உணவுப்பொருள் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என ஆய்வு கூறுகிறது. அப்போது இந்தியாவின் மக்கள் தொகை  160 கோடியாக உயரலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே விவசாய நிலங்களை விரிவாக்கம் செய்வது, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உத்திகளை கண்டறிந்து செயல்படுத்துவது போன்ற பணிகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.

வறட்சி, வெள்ளம்  தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளாலும் வேளாண் தொழில் பாதிக்கப்படுகிறது. சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள் போன்றவற்றை கையாளும் முறைகளும் சரிவர இல்லை. இப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணவேண்டும்.
செம்மை நெல் சாகுபடியைக் கையாண்டு உற்பத்தியை அதிகரித்தால் உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் குறைய வழியேற்படும்.

விலை நிலங்களாகும் விளை நிலங்கள்
விவசாய நிலங்களின் அளவு தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மனைகளாகவும், கட்டிடங்களாகவும் விவசாய நிலங்கள்  மாறிவருகின்றன. கல்லூரிகள், தொழிற்சாலைகள், பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு வேளாண் நிலங்களே தேர்வு செய்யப்படுகின்றன. காரணம் கேட்டால் தொழில் வளர்ச்சி என்கிறார்கள்.

தொழில் வளர்ச்சி எந்தளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு விவசாய வளர்ச்சியும் முக்கியம் என்பதை அறிய வேண்டும். விளைச்சல் மிகுந்த பாசனவசதிகொண்ட நிலங்களை விவசாயத்திற்கு தவிர, மற்ற காரணங்களுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். 
வறட்சிப் பகுதிகள், வறண்ட நிலங்கள் போன்ற பகுதிகளை  தொழிற்சாலைகள், கல்லூரிகள், பொருளாதார மண்டலங்கள்  உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு பயன்படுத்தலாம். தண்ணீர் தேவைகளை வெளியில் இருந்துகூட இவற்றால் நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால் வறட்சிப் பகுதி விவசாயிகளால் அவ்வாறு செய்ய இயலாது.
அரசு நேரடியாக தலையிட்டு வீணே கிடக்கும் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய உதவ வேண்டும். மேலும்  விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைத் தவிர்ப்பது, பிற காரணங்களுக்கு பயன்படுத்து வதை தடுப்பது போன்றவற்றை உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்.
கிடங்குகள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் பராமரிப்பு

உணவுப் பொருட்கள் நீண்டகாலம் கிடங்குகளில் தேக்கி வைக்கப்படுவதால் அவை புழுத்து பயனற்றதாகின்றன. மேலும்  வண்டுகளும் அவற்றை படையெடுத்து அரிக்கின்றன. இவ்வாறு உணவுப் பொருட்கள் வீணாவது ஒருபுறம் என்றால், பராமரிப்பில் குறைபாடு கொண்ட குளிர்பதன கிடங்குகள் மறுபுறம் என்ற நிலை உள்ளது.
குளிர்பதனக் கிடங்குகளை அதிகளவில் அமைத்தும், செயல்படும் குளிர்பதனக் கிடங்குகளை விரிவுபடுத்தியும், அவற்றின் திறனை உயர்த்தியும், உரிய பராமரிப்புடன் செயல்படுத்தினால் பெருமளவு வீணாவதைத் தவிர்க்கலாம்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கு அதிக இடவசதி மற்றும் முறையான கொட்டகைகளை அமைக்க வேண்டும். 
துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களை கிடங்குகளில் அதிக நாட்கள் தேக்கி வைக்காமல், உரிய காலத்திற்குள் பயன்பாட்டிற்கு அனுப்ப வழிசெய்ய வேண்டும். சரக்குக் கையாளுகையின் போதும், போக்கு வரத்தின் போதும் குறிப்பிட்ட அளவிற்கு வீணாகின்றன. இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

உயிரி எரிபொருள்
காய்கறி, பழங்களை நொதிக்கச் செய்து வெளிவரும் மீத்தேன் வாயுவிலிருந்து மின் உற்பத்தி செய்யப் படுகிறது. உணவுப்பொருள் விலை உயர்விற்கு இதுவும் ஒரு காரணமாகும். எனவே மின் உற்பதிக்கு உணவுப்பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இண்டர்பேசின் வாட்டர் டிரான்ஸ்பர்
வறட்சியும் வெள்ளமும் வேளாண் தொழிலுக்கு பெரும்பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளன. இந்நிலை மாற அதிக வெள்ளப் பகுதிகளிலிருந்து, வறட்சிப் பகுதிகளுக்கு வெள்ளத்தை கொண்டு செல்ல இண்டர்பேசின் வாட்டர் டிரான்ஸ்பர் எனப்படும் உள்நாட்டு நீர்வழிப்பாதையை அமைக்க முயற்சி மேற்கொள்ளலாம்.

புதிய வேளாண் விதைகள்
பருவநிலை மாற்றம் தற்போது உலகின் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், அவற்றால் வேளாண் தொழிலும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே எத்தகைய தட்பவெப்பநிலையையும் தாங்கும் திறன் கொண்ட வேளாண் விதைகளை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், புதிய வேளாண் விதை ஆய்வு, இன்டர்பேசின் வாட்டர் டிரான்ஸ்பர், உயிரி எரிபொருளாக உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்த்தல், வேளாண் நிலங்களை விலை நிலங்களாக மாறுவதைத் தவிர்த்தல், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்தி வீணாவதைத் தடுத்தல் போன்றவற்றை மேற்கொண்டால் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

சுகுமார் 

 

Issues: