ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்

நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து நெருக்கம் அதிகமாகும் போது தொற்று நோய் பரவல், குற்றங்கள் பெருகுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு ஆகியவை மிகவும் அதிகரிக்கும். இவற்றைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது.
பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் ஒரு அரசுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஸ்மார்ட் சிட்டியாக ஒரு நகரம் அமையும் போது இத்தகைய பிரச்சனைகளை கையாள்வது மிகவும் எளிது.
அதனால் தான் மத்திய அரசு கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான செயல்பாட்டையும் தொடங்கி உள்ளது.
2050- ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கு மக்கள் நகரங்களில்தான் வசிப்பர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. இது பல நாடுகளுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும்.
இந்த சவாலான விஷயத்தை கையாளுவதற்கான முயற்சியை இந்தியா இப்போதே தொடங்கி விட்டது. அந்த முயற்சியின் வெளிப்பாடு தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம். இத்திட்டத்திற்காக ரூ.7,060 கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
“நகர்ப்புற நிர்வாகத்தை மேம்படுத்தக் கூடியதாகவும், நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கு ஆதரவாகவும் இருக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டிகள் விளங்க வேண்டும். திடக் கழிவு, கழிவு நீர் ஆகியவற்றை முறையாக மறுசுழற்சி மூலம் பயன்படுத்தக் கூடிய திட்டங்களும் இடம்பெற வேண்டும்” என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார்.
இதுவரையில் எந்த நாட்டிலும் ஸ்மார்ட் சிட்டி குறிப்பிடத்தக்க அளவுக்கு உருவாக்கப் படவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாதான் முன்னோடியாக இருக்கும் என்று அமெரிக்க நிபுணர்களே கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதிலும் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் என்பதை மிகப் பெரிய விஷயமாக அமெரிக்க நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் ஒத்துழைக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லி வந்திருந்தபோது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஸ்மார்ட் சிட்டிகளின் உருவாக்கத்தில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டியால் என்ன பயன் என்று சிலர் கேட்கின்றனர். கண்டிப்பாக நிறைய பயன்கள் கிடைக்கும்.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். கல்வி மற்றும் வேலைக்காக பயணம் செய்வது குறையும். இதனால் கரியமில வாயு வெளியேற்றம் பெருமளவு குறையும். அரசின் சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகும்.

Issues: