கட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா?

பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்களில் மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு உட்பட்டே வளரும் நாடுகள் செயல்பட வேண்டிஇருக்கிறது. பணக்கார நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு வளரும் நாடு முடிவெடுத்து விட்டால் அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை, பணக்கார நாடுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முடக்கி விடும்.
1995-ல் WTO என்று அழைக்கப்படுகிற, உலக வர்த்தக அமைப்பு உருவானதிலிருந்தே, வளரும் நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டுத் திணிப்புகளை எதிகொள்ள வேண்டியிருக்கிறது.
GATT அமைப்பின் நீட்சியாக வந்ததுதான் WTO அமைப்பு.1947ல் GATT அமைப்பு தொடங்கப்பட்டது. General Agreement On Trade And Tariffs என்பது இதன் விரிவாக்கமாகும். அப்போது இந்த அமைப்பு, தொழில் சம்பந்தமான பொருட்களை மட்டுமே கவனத்துக்கு எடுத்துக் கொண்டது. விவசாயம் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
பன்னாட்டு நிறுவனங்கள் விவசாயத் துறையில் ஈடுபட்ட பிறகு, பெரும் லாபம் பெறவேண்டும் என்பதற்காக தங்களது யோசனைகளை அரசியல் லாபி மூலம் காட் அமைப்பை ஏற்க வைத்தன. இதன் காரணமாக 80 களில் விவசாயம், அறிவுசார் சொத்துரிமை, சேவைத் துறை உள்ளிட்ட துறைகளும் வர்த்தக வளையத்துக்குள் வந்தன.
அமெரிக்கா,ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இதனால் எந்த பிரச்சனையும் கிடையாது. வளரும் நாடுகளுக்குத்தான் பிரச்சனை. குறிப்பாக 1995-ல் கீஜிளி அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு வளரும் நாடுகளுக்கும்,ஏழை நாடுகளுக்கும் கடும் நிர்பந்தம் கொடுக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் நலனுக்காக தொடங்கப்பட்டதே WTO அமைப்பு என்ற சமுக ஆர்வலர்களின் குற்றச்சாட்டிற்கு, வளர்ந்த நாடுகள் இதுவரை பதில் தரவில்லை.
மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களின் லாப வேட்கைக்காக அமெரிக்க அரசே உலகின் பல நாடுகளை, மரபணு மாற்று விதைகளுக்கு அனுமதி அளிக்கும்படி வற்புறுத்தியதை நாம் அறிவோம்.
நமது இந்திய அரசு கூட மரபணு மாற்று விதைகளுக்கு அனுமதி அளிக்கத் தயாராகி விட்டது. ஏற்கனவே இந்தியாவால் அனுமதி அளிக்கப்பட்ட, மரபணு மாற்று பருத்தியை விதைத்த விவசாயிகள் என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பது நமக்குத் தெரியும். பெரும் நஷ்டத்திற்கு உள்ளான விவசாயிகள் கடனாளியாகி, தற்கொலை செய்து கொண்டனர்.
இது போன்ற சமூக அவலங்களை பற்றியெல்லாம் வளர்ந்த நாடுகளுக்கு கவலையில்லை. லாபம் ஒன்று மட்டுமே முக்கிய நோக்கம். உலக வர்த்தக அமைப்பின் சூழ்ச்சிக்கு முழுமையாக இந்தியாவும் அடிபணிந்து விடக்கூடாது என்பதுதான் சமுக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் 10 சதவீத அளவிற்கே ஏழை நாடுகள் விவசாய மானியமாக வழங்கவேண்டும். இந்த மானியமும் 1985&-86 ஆண்டைய விவசாய உற்பத்தியின் மதிப்பைத் தாண்டக்கூடாது என்பது உலக வர்த்தகக் கழகம் விதித்துள்ள நிபந்தனை.
இந்த ஒப்பந்தத்தினை மீறினாலோ அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலோ, உலக வங்கியின் கடனையும், வளர்ந்த நாடுகளின் கடனையும் பெற இயலாது என்பதால் வேறு வழியின்றி ஏழை நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகின்றன.
விவசாயிகளுக்கு அதிகளவில் மானியம் கொடுப்பதால் வர்த்தக விலையை விட குறைவான விலையில் இடுபொருட்கள் கிடைக்கின்றன. இது பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை முன்னிட்டு பணக்கார நாடுகள்,மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஏழை நாடுகளை வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?
1995ல் உலக வர்த்தகக் கழகம் தொடங்கப்பட்ட சமயத்தில் அமெரிக்க அரசு விவசாயத்திற்கு வழங்கிய மானியம் ஏறத்தாழ 6,100 கோடி அமெரிக்க டாலர்கள். ஐரோப்பிய யூனியன் நாடுகள் அளித்துவந்த விவசாய மானியம் ஏறத்தாழ 9,000 கோடி யூரோ. தற்போது அமெரிக்கா தனது மானியத்தை 13,000 கோடி டாலர்களாக அதிகரித்திருக்கிறது.
2001-ம் ஆண்டு தோஹா மாநாடு நடந்தது. அம்மாநாட்டில், தமது நாட்டு விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்கி வரும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும், விவசாய மானியம் தொடர்பான விதிகளை, ஏழை நாடுகள் உடனடியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தின.
மேலும் விவசாயம் சாராத பொருட்களுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தில் காணப்படும் அதிகமான சுங்க வரி, காப்புத் தடைகள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தின.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைத்துக் கொள்ளாதபோது மற்ற நாடுகளை மட்டும் வற்புறுத்துவது அதன் ஏகாதிபத்திய போக்கை நமக்கு உணர்த்துகிறது.
மோடி அரசு பதவி ஏற்ற பிறகு, இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உலக வர்த்தகக் கழகத்தின் ஒன்பதாவது அமைச்சர்கள் மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றால், இந்தியாவின் மற்றொரு நிலைபாட்டிற்கு இதர நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
அதன்படி, ஏழைகளுக்கு உதவும் தானியங்களை தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்கவும், உலக வர்த்தக வரம்பைத் தாண்டி ஏழைகளுக்கு மானியம் அளிக்கவும், விதி விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைபாட்டை இந்தியா எடுத்து அதில் உறுதியாக இருந்தது.
இது இந்திய விவசாயிகளுக்கு ஆறுதலான விசயம் என்றாலும், ஏற்றுமதி வர்த்தகத்திற்குத் தடையாக உள்ள அதிகமான சுங்க வரி, காப்பு வரிகள் உள்ளிட்ட தடைகளை நீக்குவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்திலுள்ள தடைகளை நீக்குவது என்பது இந்திய விவசாயிகளுக்கும் , சிறு உற்பத்தியாளர்களுக்கும் பாதகம் ஏற்படுத்தக் கூடிய அம்சமாகும்.
மேலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தடையின்றி இறக்குமதி செய்வதற்கும் வாய்ப்பு உண்டாகியுள்ளது. இது இந்திய பாரம்பரிய விவசாயத்தை கடுமையாக பாதிக்கும்.
‘மானியம் வழங்குவது நாட்டுக்கோ பொருளாதாரத்துக்கோ நல்லதல்ல. பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியத்தால், அதன் சுமை அதிகரித்து வருகிறது. எனவே, மானியங்களுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்வதன் மூலம் அந்தச் சுமையைக் குறைக்கவேண்டியுள்ளது’ என நிதியமைச்சர் அருண்ஜெட்லி வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறியிருப்பது விவசாயிகளுக்கும்,ஏழைகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் அனைத்து மானியங்களும் ரத்தானால் என்ன செய்வதென ஏழைகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
மூன்றில் இரண்டு பங்கு மக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நமது நாட்டில், உணவு மானியத்தையோ, விவசாய மானியத்தையோ ரத்து செய்தால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உண்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

குமார்

Issues: