கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’

மிகவும் வறுமை நிலையிலுள்ள வர்களின் வறுமை நிலையை அகற்றுவதற்கு ஜெயலலிதாவின்  முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 2005ம் ஆண்டு, புதுவாழ்வு திட்டம் என்ற ஒரு திட்டம் துவக்கப்பட்டது. இது உலக வங்கியின் நிதி உதவியுடன் அப்போது துவக்கப் பட்டது. இத்திட்டம் தமிழகத்தின் 120 ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டது.  
அதை தொடர்ந்து வறுமை நிலையிலுள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதற்கு தமிழகத்தின் ஏனைய 265 ஊராட்சி ஒன்றியங்களிலும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளை உள்ளடக்கிய 31 மாவட்டங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.

ஏழை மக்களுக்கான அமைப்புகளை உருவாக்குதல், அவற்றின் மூலம் ஏழை மக்கள் நிதி ஆதாரங்கள் பெறுதல், வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகள், பொதுச் சேவைகள், அரசால் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் ஆகியவற்றை பெற்று தருவதில் இந்த இயக்கம்  முனைப்புடன் செயல்படுகிறது. 
இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு மாநில, மாவட்ட, வட்டார, தொகுதி அளவில் தனி நிர்வாக அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கம் 2012 - 2013 ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக இந்த இயக்கத்தின் திட்டங்களை செயல்படுத்த கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 2323 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை அமைக்க தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது.  இதற்காக ரூ.232 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
இந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மக்களின் நிலையை ஆய்வு செய்யும். அதன் மூலம் ஏழைகள், மிகவும் ஏழைகள், நலிவுற்றோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் கண்டறியப்படுவர். இவர்களின் வாழ்வதாரம் உயரவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும், சமூகத்தில் உயரிய நிலையை அடையவும், சொந்தத் தொழில்புரியவும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் உதவிடும். 

ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.  அதன்படி அனைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும் தற்போது செயல்பட்டு வருகிறது.
தொழில் செய்ய விருப்பம் உள்ள பெண்கள், தொழில் தொடங்க வங்கி மூலம் கடன் பெற உதவி செய்யும் பணியும் இச்சங்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. அதே போன்று பெண்களை கொண்டு குழு அமைத்து அவர்களுக்கு தொழில் கூடம், மின்சாரம், சந்தை வசதி போன்றவையும்  ஏற்பாடு செய்து தரப்படுகிறது. மேலும் தொழில் குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே எந்த வருமானமும் இல்லாமல் இருந்தவர்கள்,  தொழில் குழு உறுப்பினர்களாக ஆன பின்னர் ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை வருமானம் பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும்  தலா ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டு உள்ளது.   கிராம அளவிலான அடிப்படை விபரம், குழுக்கள் விவரம், நலிவுற்றோர் விவரம்,  கணக்கு பதிவேடுகள் பற்றிய விவரம் போன்றவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிராம அளவிலான ஊராட்சி விவரங்களை அறிந்து கொள்ள முடியும். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது தொலைநோக்கு திட்டத்தில் அனைத்து பிரிவு மக்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை முக்கிய குறிக்கோளாக வலியுறுத்தியிருக்கிறார். அக்குறிகோளை அடையும் வகையில் கிராம மக்களின் வாழ்வுநிலை மேம்பாடு அடைய,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை நிறுவுவதற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த சங்கங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதால் இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் அதாவது கிராம மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கலாம்.

கலை

Issues: