பழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை! விரைவில் அமுலாகும் புதிய திட்டம்

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு அரசுக்கும், மக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களில் இருந்து வெளி வரும் புகை ஏற்படுத்தும் மாசின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

பெருநகரங்களில் வாகன எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்திற்கு சென்னை நகரத்தை எடுத்துக்கொள்வோம். நாள் ஒன்றுக்கு 1000 புதிய வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைகின்றன.

சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை 60 லட்சத்தை கடந்து விட்டது.  வாகனங்களின் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. ஆக 2 நபர்களுக்கு ஒரு வாகனம் என்ற அளவில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்சம் வாகனங்கள்தான் சென்னையில் உலா வந்து கொண்டிருந்தன. இன்றைக்கு எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்பதை பார்க்கும் போது மிகவும் மலைப்பாக உள்ளது.

இப்படி அதிகரிக்கும் வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவும் அதிகரிக்கிறது.இதை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் கோளாறுகள் உண்டாகின்றன. இதன் காரணமாக சளி தொந்தரவு, மூக்கடைப்பு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட நேரிடுகிறது. நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இந்த புகை மாசு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மாநகர மக்கள், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலை நாடுகளில் யூரோ 5 தரத்திலான வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் வெளியிடும் புகையினால் மாசு என்பது குறைவான அளவிலேயே உள்ளது.

ஆனால் நமது நாட்டில் இந்த தரத்தில் வாகனங்கள் தயாரிக்கப்படுவதில்லை. அதனால்தான் பசுமை தீர்ப்பாயம், யூரோ 5 தரத்திலான வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு  சில ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதை நடைமுறைப் படுத்த முந்தைய அரசு தவறிவிட்டது. தற்போதைய மத்திய அரசு இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு புதிய வழிமுறையை கொண்டு வர தீர்மானித்துள்ளது. அது என்ன?

மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுவதை கேளுங்கள்:
 ‘சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் 10 ஆண்டுக்கு மேலான பழைய வாகனங்களை ஒப்படைத்து புதுப்பிப்போருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது. இந்த பரிந்துரையை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளோம். அதன் ஒப்புதலுக்கு பிறகு இத்திட்டம் நடைமுறைக்கு வரும்’ என்றார்.

இந்த திட்டத்தின் படி பழைய வாகனங்களை விற்கும்போது அதற்கான சான்று ஒன்று வழங்கப்படும். புதிய வாகனம் வாங்கும்போது அந்த சான்றை கொடுத்து ரூ.50 ஆயிரம் வரை சலுகை பெறலாம். கார்களுக்கு இந்த ஊக்கத்தொகை ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். கனரக வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை கிடைக்கும். இதற்காக துறைமுகங்கள் அருகில் பழைய வாகனங்கள் வாங்கும் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சுமணன்

 

Issues: