தொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்

பல்வேறு இடையூறுகளை கடந்து சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்கள் ஏராளம். தொழில் வெற்றிகரமாக நடக்கும் போது அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கும்.
தொழிலை உரிய முறையில் விரிவாக்கம் செய்தவர்கள்தான் இன்றைக்கு பெரும் தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவேதான் தொழிலை விரிவாக்கம் செய்ய பலர் விரும்புகின்றனர்.
விரிவாக்கம் செய்து தோல்வியில் முடிந்த தொழில் கதைகளும் நமது நாட்டில் உண்டு. இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, தொழிலை விரிவாக்கம் செய்ய முனைபவர், செயல்பட வேண்டும்.
ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கிய பெட்ரோல் நிலையங்கள் தோல்வியில் முடிந்ததை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இது மட்டுமல்ல, பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில்களை விரிவாக்கம் செய்த பிறகு அவை தோல்வியில் முடிந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக்கண்டு, தொழிலை விரிவாக்கம் செய்ய முனைவோர், மிகப்பெரிய நிறுவனங்களே தொழில்களை விரிவாக்கம் செய்வதில் தோல்வி கண்டிருக்கும்போது, நம்மால் வெற்றிபெற முடியுமா என்ற அச்சமெல்லாம் கொள்ளத் தேவையில்லை.
அந்நிறுவனங்களின் தோல்வியில் இது ஒரு சதவீதம் மட்டுமே. உண்மையில் அந்நிறுவனங் களின் மகத்தான வெற்றிக்கு காரணமே, தொழில்களை விரிவாக்கம் செய்ததுதான்.
விரிவாக்கம் செய்யப்படும் வியாபாரம் சரியான முறையில் கொண்டு செல்லப்பட்டால் கண்டிப்பாக அது வெற்றிகரமானதாக அமையும். சேவையோ, தயாரிப்போ தனித்தன்மை வாய்ந்ததாக இருந்துவிட்டால் விரிவாக்கம் கண்டிப்பாக வெற்றியடையும்.
விரிவாக்கம் என்பது இரண்டு வழிகளில் நிகழ்த்தப்படுகிறது. ஒன்று, நிறுவனமே கிளைகளை நேரடியாக நிறுவுவது. இதற்கு உதாரணமாக போத்தீஸ், சென்னை சில்க்ஸ் போன்றவற்றை சொல்லலாம்.
மற்றொன்று பிரான்சைஸி என அழைக்கப்படும் உரிமக்கிளை. இதற்கு உதாரணமாக மெக்டொனால்ட்ஸ், கென்டகி பிரைடு சிக்கன் (கேஎப்சி), புரபஷனல் கொரியர் போன்றவற்றை குறிப்பிடலாம். மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் வளர்ந்த விதத்தை இப்போது சுருக்கமாக பார்ப்போம்.
ஆரம்பத்தில், மதிய உணவுக்கும் இரவு உணவுக்குமான இடமாக மெக்டொனால்ஸ் இருந்து வந்தது. அதன் பெரும்பாலான கிளைகள் பதினோரு மணிக்குமேல்தான் திறக்கும்.
இப்படி நிலைமை சென்று கொண்டிருந்த போது, பிரான்சைஸி உரிமம் பெற்ற ஒருவர், காலை நேரத்தில் முட்டை சாண்ட்விச் விற்க எண்ணி, அதை செயல்படுத்தினார்.
அறிமுகப்படுத்திய நாளிலேயே நல்ல வரவேற்பு இருந்தது. மெக்டொனால்ட்ஸ் உரிமையாளர் ரேக் ராக்கிடம் முட்டை சாண்ட்விட்சை ருசிபார்க்கக் கொடுத்தார். ஏற்கனவே ரேக்ராக், சாண்ட்விச் பிரியராக இருந்தவர். ருசி நன்றாக இருந்ததால் தன்னுடைய கிளைகள் அனைத்திலுமே காலை நேரங்களில் சாண்ட்விச் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்தார். பிறகு ரேக்ராக் இன்னொரு விஷயத்தையும் சிந்திக்க ஆரம்பித்தார்.
மூன்று வேளை உணவு போக, மற்ற நேரங்களில் பிரெஞ்ச் ஃப்ரை, ஸ்நேக் ராப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை வடிவமைப்பது குறித்து யோசித்து அதை செயல்படுத்தினார். கடைகளில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியது.
அதேபோல பிரான்சைஸி உரிமம் பெறவும் ஏராளமானோர் முன்வந்தனர். இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தனது கிளைகளை பிரான்சைஸி உரிமம் மூலம் பரப்பி வெற்றிகரமாக வியாபாரம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணமே சிறந்த சுவை கொண்ட அதன் தனித்தன்மைதான்.
இதே உணவக தொழிலில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் கொடிகட்டி பறக்கிறார். அதை சுருக்கமாக பார்ப்போம்.
தூத்துக்குடி, நாகலாபுரத்தைச் சேர்ந்த பிரேம் கணபதி என்பவர் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். வேலை பார்ப்பதற்காக மும்பை சென்ற இவருக்கு ஒரு டீக்கடையில் வேலை கிடைத்தது.
பின்னர் அந்த வேலையை உதறி விட்டு பேக்கரியிலும் உணவகத்திலும் வேலை பார்த்தார். அப்போது மற்றொருவருடன் சேர்ந்து வீதியோர உணவகம் அமைத்தார். அது வெற்றிகரமாக அமையவில்லை. அதன் பிறகு 150 ரூபாய்க்கு கை வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, தானே சமைத்து தெருத் தெருவாய் விற்பனை செய்யத் தொடங்கினார்.
காலை 5 மணிக்கு சமையல் வேலையைத் தொடங்கி, பின்னர் உணவை எடுத்துக்கொண்டு மதியம் 4வரை வீதிகளில் அலைந்து விற்பனை செய்வார். மாலை வேளைகளில் இண்டர்நெட் சென்டருக்கு சென்று தொழில் மேம்பாடு குறித்த கட்டுரைகளை வாசிப்பார்.
இதன் மூலம் தனது தொழிலை நிறுவன முறையில் நடத்துவதற்கான ஐடியாவைப் பெற்றார். பின்னர் படிப்படியாய் அவர் வளர்ச்சி அடையத் தொடங்கினார்.
1998ல் பிரேம்சாகர் தோசா ப்ளாஸா என்ற பெயரில் கடையைத் தொடங்கினார். இன்று அமெரிக்கா, துபாய், ஆஸ்திரலியா, நியுசிலாந்து, கத்தார், தன்சானியா, மஸ்கட் என வெளிநாடுகளிலும் இவரது கடை பிரான்சைஸி உரிமம் முறையில் நிறுவப்பட்டுள்ளது.
மெக்டொனால்ஸ் நிறுவனத்தைப் போன்று பிரேம்சாகர் தோசா ப்ளாஸா கடைக்கென்றும் தனித்த சுவை உள்ளது. அதுதான் பிரேம் கணபதி வெற்றியின் ரகசியம். இந்த ஆண்டுக்குள் 100 கிளைகளை உலகெங்கும் திறப்பதற்கு இவர் இலக்கு நிர்ணயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக்கத்தின் மூலம் ஒரு தொழிலின் சேவை பல தரப்பட்ட மக்களையும் சென்றடைவதற்கு மிகச் சிறந்த வழி பிரான்சைஸி . தொழிலை விரிவாக்கம் செய்ய முனைவோர், தனது தொழிலில் விரிவாக்கத்துக்கு ஏற்ற தனித்தன்மையை கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் பிரான்சைஸி வெற்றியடையும்.
பிரதான டீலர், உள்ளூர் ஸ்டாக்கிஸ்ட் என விநியோக சங்கிலி நீண்டு கடைசியில் சில்லரை வர்த்தகரைச் சென்றடைவது வழக்கமான பிசினஸ் நடைமுறை.
ஆனால் இன்றைக்கு அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங் களால் இந்த வழக்கமான பிசினஸ் நடைமுறை காலாவதி ஆகிவிடும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இந்த நிலைமையையும், தொழிலை விரிவாக்கம் செய்ய முனைவோர், கவனத்தில் கொள்ள வேண்டும்.
சகா

Issues: