சிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்!
சிலிண்டர் மீதான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியபோது, பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும் என்றும், இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும் சொல்லப்பட்டன.
ஆனாலும், மத்திய அரசு இத்திட்டத்தை உறுதியோடு செயல்படுத்தியது. தற்போது இத்திட்டம் மிகச்சிறப்பான வெற்றியை அடைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் சூழல் உருவாகி உள்ளது.
வீடுகளில் பயன்படுத்தும் ஒரு எல்பிஜி சிலிண்டரின் சந்தை விலை ரூ.626 ஆகும். மானிய விலையில் இது ரூ.417க்கு அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முழுத்தொகையை கொடுத்து சிலிண்டர் பெற்றுக்கொள்கிறார்கள். சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டவுடன் பயனாளியின் வங்கிக் கணக்கில் ரூ.209 மானியமாக சேர்க்கப்பட்டு விடுகிறது. ஆக ஒரு பயனாளி பெரும் மானியம் ஆண்டுக்கு சுமார் ரூ.2500 ஆகும்.
தற்போது கள்ளச் சந்தையில் அரசின் மானிய விலை கேஸ் விற்கப்படுவது பெருமளவு குறைந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம், சிலிண்டர் மீதான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதுதான்.
போலியாக வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவது குறைந்து விட்டது. போலி பயனாளிகளும் களையப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால் வீடுகளில் சமையல் எரிவாவை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க வசதி படைத்தவர்கள் தாங்களாகவே முன்வந்து மானிய கேஸ் பெறுவதை நிறுத்திக் கொண்டனர். இவ்வாறு நிறுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் பேர். இன்னும் பலர் விலகிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பிரச்சாரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் இவற்றின் விலையை பெட்ரோலிய நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை வந்த பிறகு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது. மத்திய அரசுக்கு தற்போதைய நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனையினால் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
அரசு தற்போது சமையல் எரிவாயுவிற்கும், மண்ணெண்ணைக்கும் மட்டும் மானியம் அளித்து வருகிறது.
சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒர் ஆண்டில் 6 சிலிண்டர் என்ற வரையறை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் 12 சிலிண்டர் என்ற வரையறை கொண்டுவரப்பட்டது. தற்போதும் அந்த வரையறையே நீடிக்கிறது. பெரிய குடும்பங்களுக்கு இந்த 12 சிலிண்டர் போதுமானதாக இல்லை என்பதால் சிலிண்டரின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இதை மத்திய அரசு பரிசீலிக்குமா?
கண்ணன்