இகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்!

இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரம் கூறுகிறது. உலக அளவில் சீனாவிற்கு அடுத்து அதிகம் இணையத்தை பயன்படுத்துவது இந்தியர்கள் என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது.
இணையத்தில் பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இணையம் வழியாகவே சேவையை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக இ-காமர்ஸ் வர்த்தகம் வருடத்திற்கு 30 சதவீதம் என்ற அளவிற்கு வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இந்த இ-காமர்ஸ் துறையில் அடுத்த ஆறு மாதத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என வல்லுனர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர்.
2014ம் ஆண்டு இத்துறையின் வர்த்தக மதிப்பு 1500 கோடி டாலராக இருந்தது. இதுவே 2009ம் ஆண்டில் 380 கோடி டாலராக இருந்தது. இதை வைத்தே இத்துறையின் வளர்ச்சி எவ்வளவு அபரிமிதமாக உள்ளது என்பதை உணர முடிகிறது.
மற்ற நாடுகள் எல்லாம் இத்துறையில் 10 சதவீத அளவிற்கே வளர்சியை பெற்று வரும் நிலையில் இந்தியா 30 சதவீத வளர்ச்சியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் துறையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு உரிய கவுரவமும், சம்பளமும் கொடுக்காவிட்டால், பணியாளர்களை தக்க வைப்பது கடினம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பணியாளர்கள் நல்ல ஊதியத்தை எதிர்பார்ப்பதோடு புதுமை, வேலை செய்யும் சூழ்நிலை, அடுத்த கட்ட வளர்ச்சி போன்றவற்றையும் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு பணியாளர் பற்றாக்குறை என்ற பிரச்சினையே ஏற்படாது.
இந்த துறையில் ஆலோசகர்களுக்கு தேவையும் அதிகரித்திருக்கிறது. ஏனெனில் பல இகாமர்ஸ் நிறுவனங்கள் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து திட்டங்கள் வைத்திருக்கின்றன.
அமேசான், பிளிப்கார்ட் ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள் அசுர வளர்ச்சியை அடைந்து வருகின்றன. புதிய யுக்திகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் இந்நிறுவனங்கள் வாயிலாக பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த நிறுவனங்களால் சிறு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், யுக்திகளை மாற்றி அமைப்பதன் மூலம் களத்தில் நீடித்து நிற்க முடியும். இன்றைக்கு பல்வேறு வகையான பொருட்களை மக்கள் ஆன்லைன் மூலமாகவே வாங்கி வருகின்றனர்.
எனவே தான் பல புதிய நிறுவனங்கள் இகாமர்ஸ் துறையில் ஈடுபட பெறும் ஆர்வம் காட்டி வருகின்றன.

Issues: