ஒவ்வொரு இளைஞனும் கனவு காண வேண்டும்-MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்

இது மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம். மாணவர்கள் குறிப்பாக பிளஸ்டூ மாணவர்கள் எதிர்காலம் குறித்த யோசனைகளில் திளைத்திருப்பர். பலரது யோசனை உயர்கல்வி குறித்ததாக இருக்கும்.
படிப்பை தொடர முடியாத சூழலில் உள்ளவர்கள், எந்த வேலைக்கு செல்வது என்பது குறித்து யோசிப்பர். எது எப்படியிருப்பினும் இந்த இளைஞர்கள்தான் வருங்காலத்தை ஆளப்போகிறவர்கள். இவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்ன ஒரு விஷயத்தை இங்கு சொல்வது நல்ல தெளிவை ஏற்படுத்தும்.
‘கனவு என்பது உறக்கத்தில் வருவது அல்ல.உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. வாழ்வில் வெற்றிடைய ஒவ்வொருவரும் இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும். மிகவும் எளிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது ஒன்று.
மற்றொன்று, கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதி கொள்வது. தோல்விக்கு விடை கொடுத்து லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பரவூர் கிராமத்தில் நடந்த, மக்களை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தேன்.
அந்த கிராமத்தில் 2,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிக்க வைப்பதாக அக்கிராமத்தில் உள்ளவர்கள் உறுதிமொழி எடுத்தனர். அப்போது ஒரு மாணவனிடம் கேள்வி கேட்டேன்.
அந்த மாணவன், தனக்கு உளவியல் படிக்க ஆசை என்றும், ஆனால் பெற்றோர் தொழிற்கல்வி படிக்க கட்டாயப்படுத்துவதாகவும் கூறினான். உடனே நான், பெற்றோர் உன்னை நேசிப்பதால் அப்படி விரும்புகிறார்கள் என்று கூறினேன்.
உடனே கூட்டத்தில் இருந்த அந்த மாணவனின் பெற்றோர் எழுந்து நின்று, மகன் விருப்பப்படியே உளவியல் படிக்க வைப்பதாக தெரிவித்தார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால், அன்பும், அரவணைப்பும் மாணவர்களுக்கு கட்டாயம் தேவை.
இன்னமும், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மன உறுதியுடன் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை’ என்று அப்துல் கலாம் கூறினார்.
மாணவச் செல்வங்களான இளைஞர்கள், எதையும் சாதிக்க முடியும் என்ற மனப்பான்மையை வளர்த்து செயல்பட்டால் கல்வியிலும் சரி, தொழிலும் சரி, கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.
இளம் வயதில் படிப்பதற்கு கூட வசதியில்லாமல், அல்லல்பட்டு பின்னர் போராடி வெற்றி பெற்று, இந்திய அளவில் புகழடைந்த ஒரு பெண்மணியைப் பற்றி சிறிது தெரிந்து கொண்டால் அது இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். அவர் வேறு யாருமல்ல, இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படும் லதா மங்கேஷ்கர்தான் அந்தப்பெண்மணி.
30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை, வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. வறுமை நிறைந்த ஒரு குடும்பத்தில் பெண்ணாக பிறந்து, போராடி வாழ்க்கையின் உயர் நிலைக்கு வந்தவர்.
பதிமூன்று வயதில் தன் தந்தையை இழந்த அவர், தன் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றவர். முன்னேற விரும்புகின்றவர்களுக்கு அவரது வாழ்க்கை ஒரு அருமையான பாடமாகும்.
தந்தையின் இறப்புக்கு பிறகு, குடும்பத்தை காப்பாற்ற நாடகக் கம்பெனிகளில் ஏறி இறங்கி வாய்ப்பு தேடினார். குரல் சரியில்லை என நிராகரித்தனர். எனினும் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக சொன்னார்கள்.
காரணம் அவரது அழகு. ஆனால், லதாவுக்கு நடிப்பில் விருப்பமில்லை. இசையில்தான் பெரும் விருப்பம். அதனால் பாடுவதையே விரும்பினார். பாடல்தான் தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தார்.
வினாயக் என்பவர் தனது சொந்த படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் மாரடைப்பில் இறந்து போனார். இதனால் லதாவின் வாழ்வில் வறுமை துரத்த தொடங்கியது.
எனினும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து வாய்ப்பு தேடிக்கொண்டே இருந்தார். ஒருநாள் வேலைதேடி சோர்ந்துபோய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக, குலாம் ஹைதர் என்ற இசையமைப்பாளரை சந்தித்தார்.
லதாவின் குரல் வளத்தை அங்கேயே சோதித்தார். குரலின் இனிமை அவருக்கு பிடித்துப்போக பாடுவதற்கு வாய்ப்பளிப்பதாக உறுதி அளித்தார்.
அன்றிலிருந்து லதா படிப்படியாக இசைத்துறையில் முன்னேற தொடங்கினார். தன் வாழ்வை இசைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். இதற்காக திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படப் பாடல்கள் மட்டுமன்றி, கர்நாடக மற்றும் இந்துஸ்தான் இசையிலும் தேர்ச்சி பெற்றார். மராட்டிய மண்ணில் பிறந்த அவர், இந்தியாவின் இசைக்குயிலாகி, வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.
பெண்னான தன்னால் உயர்நிலைக்கு வரமுடியாது என்று கருதி அன்றைக்கு வேறு ஏதாவது வேலைக்குச் சம்பளத்துக்கு சென்றிருந்தால் அவரால் இந்தியாவின் இசைக்குயிலாகி இருக்க முடியாது.
லட்சியத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை அவரது நாடி நரம்புகளில் பரவி இருந்ததால் அவரது தன்னம்பிக்கையை வறுமையால் கூட குலைக்க முடியவில்லை. இதைத்தான் விவேகானந்தரும் சொன்னார்;
‘வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை தேர்ந்தெடுத்துக்கொள். அதை உயிருக்கு இணையாக நினை. லட்சியத்தை ரத்தத்தோடு கலந்துவிடு. அதை நோக்கியே செயல்பட்டுக் கொண்டிரு. வெற்றிக்கு இதுவே வழி’ என்று.
இதை இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்னேற விரும்பும் இளைஞர்கள் மனதை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் எப்போது வேண்டு மானாலும் வாய்ப்பு கதவைத் தட்டும். நேர்மறை மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த மனநிலை மட்டும் வந்துவிட்டால் கிடைக்கும் பலன்கள் ஆச்சரியமானவை. நேர்மறை எண்ணத்துடன் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் ஆளுமையே மாறி விடும். சாதிக்க வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் படிப்படியாக வளர்ந்துவிடும்.
ஒரு மனிதனின் குணங்களில் சிறந்தது தன்னம்பிக்கையே. முடியும் என்று நினைத்தால் முடியும். அதுவே முடியாது என்று நினைத்தால் முடியாது.
எதையும் தீர்மானிக்க முடியாமல் திணறுவதில் இருந்து வெளியேறி தீர்க்கமாக இருப்பதற்கு பெயர் தான் இளமை. இளைஞர்கள் இத்தகைய குணாம்சத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உலக மயமாக்கல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே உலக தரத்துக்கு இணையாக திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தில் இருந்தும் கற்றுக் கொள்ள தயாராக இருக்கவேண்டும்.
உலகின் மிக இளமையான நாடு இந்தியா. அதாவது இந்தியாவில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இவ்வளவு இளைஞர் சக்தி உள்ள நமது நாடு வல்லரசு ஆக வேண்டுமெனில் இளைஞர்களின் கனவு நனவாவதற்கு அரசும் சமூகமும் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

Issues: