நல்ல லாபம் தரும் புதினா சாகுபடி

ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ வரை மகசூல் தரும் புதினாவை பயிர் செய்வது மிகவும் எளிது. மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் புதினாவை பயிரிட்டு நல்ல லாபம் பார்க்கின்றனர்.
புதினாவை வணிக நோக்கில் பயிரிடுவது நல்ல லாபத்துக்கு வழி வகுக்கும் என்பது வேளாண் அலுவலர்களின் கருத்தாக உள்ளது.
புதினா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு தாவரம் என்று கூறப்படுகிறது. சமையலில் புதினாவிற்கு முக்கிய இடம் உண்டு.
இதன் சுவையும், மருத்துவ குணங்களும் மக்களை கவர்ந்த அம்சமாகும். ஒவ்வொரு வீட்டிலும் புதினா சட்டினியை வாரத்திற்கு இரண்டு முறையாவது அரைக்கிறார்கள். எனவே வருடம் முழுவதும் புதினாவின் தேவை உள்ளது.
வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக புதினா திகழ்கிறது. புதினாவை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு ரத்தம் சுத்தமாகும். தொண்டைக் கரகரப்பைப் போக்கும்.
பல்வேறு மருந்துகள், மிட்டாய்கள் போன்றவற்றில் புதினா எண்ணெய் (மின்ட்) பிரதான சேர்மானப் பொருளாக உள்ளது.
புதினா இலையில் வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் போன்ற சத்துக்கள் உள்ளதால் அதிலிருந்து எடுக்கப்படும் புதினா எண்ணெயானது உணவுப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவற்றில் சேர்க்கப்படுகிறது. தலைவலி களிம்புகள், கிரீம்கள், இன்ஹேலர்கள் போன்றவற்றிலும் புதினா பிரதான பொருளாகச் சேர்க்கப்படுகிறது.
ஒரு ஏக்கரில் உழுது, பாத்தி கட்டி, புதினா நடவு செய்யச் சுமார் ரூ.1 லட்சம்வரை செலவு ஆகும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. இயற்கை உரத்தை பயன் படுத்துவது சிறந்தது.
60 நாட்களில் பறிக்கும் நிலைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோவரை பறிக்கலாம். சீசன் காலங்களில் ரூ.50 முதல் 70 வரை விலை போகிறது. சீசன் இல்லாத காலங்களிலும் ஒரு கிலோவுக்கு ரூ. 30 கிடைக்கும். செலவு போக அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வரை ஒரு அறுவடையில் லாபம் கிடைக்கும். 4 ஆண்டுகள்வரை தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒரு முறை புதினாவை அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.
இதைச் சந்தைப்படுத்துவது மிகவும் எளிது. வியாபாரிகளே நேரடியாக வாங்கிச் சென்றுவிடுவார்கள். புதினா சாகுபடிக்கு உப்பு நீரையோ, சப்பை நீரையோ பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். எனவே நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும் என்பது முக்கியமான அம்சமாகும்.
வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். வாழை, கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் ஊடு பயிராகவும் புதினாவை பயிரிட்டு கூடுதல் லாபம் பெறலாம்.
எண்ணெய்க்கான புதினா சாகுபடியும் மிகவும் லாபகரமானது. இந்த வகை புதினாவில் இருந்து ஆவி வடித்தல் முறையில் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த புதினா எண்ணெய் சர்வதேச சந்தையில் கிலோ ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. எண்ணெய்க்கான புதினாவை 90 நாளில் அறுவடை செய்யலாம்.

Issues: