வாய்ப்புகளுக்கான தேசமாக உருவாகி வரும் இந்தியா!. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்

நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் புத்துணர்வு கிடைத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நட்புணர்வை வளர்ப்பதோடு, இந்தியாவில் முதலீடுகள் குவிவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறார் மோடி.
மோடி பதவி ஏற்ற பிறகு இந்தியாவின் வெளியுறவு கொள்கை ஒரு புதிய அத்தியாயத்தை அடைந்துள்ளது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இந்தியாவோடு நட்புறவு பேணுவதை மிகவும் விரும்புகின்றன.
ஜனவரி 25ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் பயணமாக இந்தியா வந்த போது, மோடி அரசை மிகவும் புகழ்ந்து தள்ளினார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மேலும் அதிகரிக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தையும் பதிவு செய்தார்.
அணுசக்தி, பாதுகாப்பு, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் இரு நாடுகளுக்கிடையே சில ஒப்பந்தங்களும் ஏற்பட்டன. இதன்காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு வலுவடைவதோடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். அமெரிக்காவின் புதிய தொழில் நுட்பங்கள் நமது நாட்டிற்கு கிடைக்கும் சந்தர்ப்பமும் ஒபாமாவின் வருகையால் உருவாகி உள்ளது.
இந்தியா என்பது வாய்ப்புகளுக்கான தேசம் என்பதை மோடி அரசு உருவாக்கி வருகிறது. வருங்காலத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் களின்எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, வெளிநாட்டினர் இந்தியாவை நோக்கி வேலைவாய்ப்புக்காக படை எடுக்கும் காலம் கணிந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
கடந்த 2009ம் ஆண்டில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தின் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிய தொடங்கியது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்குள் இருந்தது. மோடி பதவி ஏற்ற பிறகு பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது பெரிய சவாலான பணி என்றாலும், அதை திறம்பட மோடி அரசு மேற்கொள்வதால், வருகிற ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மிக அதிக வளர்ச்சியை எட்டும்.
பொருளாதார வளர்ச்சிக்காக கொள்கை முடிவுகள் உடனுக்குடன் எடுக்கப்படுகின்றன. வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருக்கும் சட்டபிரிவுகளை நீக்கி, புதிய சட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றவும் மத்திய அரசு தவறவில்லை.
வரவு செலவிற்கு இடையே உள்ள பற்றாக்குறையின் அளவை வெகுவாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இதற்காக செலவு நிர்வாக குழுவை அமைத்து, அரசு தேவையில்லாத செலவுகளை கட்டுபடுத்தி குறைத்து வருகிறது. இது சுய கட்டுப்பாட்டுடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதை உணர்த்துகிறது.
பெட்ரோலிய துறையில் சிறந்த சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. டீசல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்தை முக்கிய சீர்திருத்தமாக கூறலாம். இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்கள் விற்பனையில் பல தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.
எரிவாயு விலை சர்வதேச விலையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு முதலீடுகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், எரிவாயு அதிக அளவில் கிடைக்கும். இது மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை சிறப்பான முறையில் மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.
இந்த நேரடி பணபட்டுவாடா திட்டமானது உலக அளவில் மிக பெரிய திட்டமாகும். சுமார் 8 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக மானியத்தை வங்கிக்கணக்கில் பெறுகிறார்கள் என்பது ஒரு மகத்தான திட்டம்.
இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு குடும்பம் இத்திட்டத்தால் நேரடிப்பயனை நுகர தொடங்கி உள்ளனர். இத்திட்டத்தால் கள்ள சந்தையில் சமையல் எரிவாயு விற்கப்படுவது கட்டுப்படுத்தப்படும். உரிய பயனாளிகளுக்கு மட்டுமே இது சென்றடைவதால் பெருமளவு சேதாரம் தவிர்க்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற மானிய திட்டங்களிலும் நேரடியாக வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தும் திட்டத்தை நடைமுறைபடுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இவ்வாறு செய்வதால் போலியான பயனாளிகள் களையப்படுவர். அரசின் நிதிச்சுமை பெரும் அளவு குறையும்.
மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக பண வீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்கு கச்சா எண்ணெயின் விலை குறைப்பு ஒரு காரணமாக இருந்தாலும், மற்ற இறக்குமதி செலவினம் பெரும் அளவு குறைந்ததும் ஒரு காரணமாகும்.
உணவு பணவீக்கம் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு 10 சதவீதமாக இருந்தது. மோடி அரசு பதவி ஏற்ற பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது உணவு பண வீக்கம் 3 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த மாதம் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால் வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன. இது தொழில் துறைக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. இந்த வரிதிட்டத்தை அறிமுகப்படுத்தினால், மத்திய அரசின் வருவாய் கூடும். அதே சமயத்தில், மாநிலங்களின் வருவாயில் துண்டு விழும் என்பது இந்த வரி திட்டத்தில் உள்ள பலவீனமான அம்சாகும். இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
கடந்த நான்கே ஆண்டுகளில் பிரதமரின் ஜன்தன் யோஜ்னா திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழைகளும் வங்கியில் பண பரிமாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் புதிதாக 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதால் மக்களின் சேமிப்பு உயரும். சேமிப்பின் மூலம் வங்கிகளுக்கு கிடைக்கும் தொகை, தொழில் நிறுவனங்களுக்கு கடனாக செல்லும் என்பதால் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.
அத்துடன் மக்கள் புதிய நிதி திட்டங்களில் முதலீடும் செய்வார்கள். நாடு வளர வளர இந்த வங்கிக்கணக்குகள் புதிய தேவைகளையும் வளர்ச்சியையும் உருவாக்கும்.
நிலக்கரி சுரங்கங்களை வெளிப்படையாக ஏலம் விடும் நடைமுறை புதிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்புக்குரிய ஒரு திட்டமாகும். மேலும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க, சுரங்கங்களுக்கான விதிமுறைகளை மாற்றி அமைக்வும் மத்திய அரசு முயன்று வருகிறது.
மின் உற்பத்திக்கு அடிப்படை ஆதாரமாக திகழ்வது நிலக்கரி. இந்த நிலக்கரி சம்மந்தமானவற்றில் செய்யப்பட்ட சீர் திருத்தங்களை போலவே மின் உற்பத்தி துறையிலும் சீர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியா உலக அளவில் முதலீட்டிற்கு சிறந்த இடமாக உருவாவதற்கு மோடி அரசு பாடுபட்டு வருவதை மேலேயே குறிப்பிட்டோம்.
இதற்காக, அந்நிய முதலீட்டு வரையறைகள் மாற்றப்பட்டுள்ளன. காப்பீட்டு துறையிலும், ரியல் எஸ்டேட் துறையிலும் அந்நிய முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளிலும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நில உரிமையாளர்களிடமிருந்து அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்களை பெருவதற்கான சட்டத்தை மத்திய அரசு திருத்தி உள்ளது. இந்த நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்திற்கு பல எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதில் உள்ள சரத்துகள் விவசாயிகளை பாதிக்கும் வகையில் உள்ளதால் அதில் சில திருத்தங்களை மேற்கொள்வது நல்லது. நிலத்தை வழங்கும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க, நிலம் கையகப்படுத்தும் சட்டம் அவசியம் என்பதில் ஐயம் இல்லை. அதே சமயத்தில் அந்த சட்டம் விவசாயிகளை பாதிக்காத வகையிலும் இருக்க வேண்டும்.
உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஊக்குவிப்பு முயற்சிகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை வசதியை மேம்படுத்த புதிய முதலீடுகளை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரு அரசு செயல்படுவதில் வெளிப்படை தன்மை மிகவும் முக்கியம். அதேபோல் திறமைக்கு முன்னுரிமை அளித்தலும் முக்கியம். இந்த இரண்டு விஷயங்களையும் மோடி அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது.
பொதுத்துறை வங்கிகள் சுதந்திரமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தொழில் துறைக்கும், விவசாய துறைக்கும் தாராளமாக கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் இரு துறைகளும் சிறப்பான வளர்ச்சியை அடையும்.
மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசுப் பணியாளர்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு வருவதை உறுதி செய்து இருக்கிறது. வேலை செய்வதை ஊக்குவிக்கவும் செய்திருக்கிறது. இதனால் அனைத்து விதமான மத்திய அரசு பணிகளும் துரிதமாக நடைபெறுகின்றன.
பொது விநியோக முறையை முழுமையாக கணினி மயமாக்குவதற்கு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உணவு பொருட்களின் விநியோகத்தை சரியான முறையில் நடத்த உதவி புரியும். சேதாரங்கள் தடுக்கப்படும். தவறுகள் கட்டுப்படுத்தப்படும்.
தொழில் தொடங்குவதற்கான பல கட்ட அனுமதியை மத்திய அரசு குறைத்து வருகிறது. இதனால் ஏராளமான புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆர்வத்துடன் முன் வந்துள்ளன.
திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. இது திட்டமிடுதலை விடவும், செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதால் இதை இந்தியாவை மாற்றுவதற்கான அமைப்பு என்று சொல்லலாம்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை முறையில் சுத்தம் என்பது ஒரு பழக்கமாக மாறும். தொற்று நோய்களை ஒழிக்கும்.
சுகாதாரமான வாழ்க்கையை உருவாக்கும். இது சுற்றுலா துறை மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும். ஏனெனில் வெளிநாட்டினரின் மனதில் இந்தியாவில் சுத்தம் என்பதே இல்லை என்ற எண்ணம்தான் மேலோங்கி உள்ளது. அந்த எண்ணத்தை இந்த திட்டம் மாற்றும். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.
இந்தியா 20 டிரில்லியன் டாலர் பொருளா தாரமாக உயர்வதற்கு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருவதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
பிரதமரின் இந்த இலக்கு மிகவும் வரவேற்புக்குரியது. நாட்டின் தொழில் துறையை ஊக்குவிக்கக்கூடியது. இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 2 டிரில்லியன் டாலர். இதை 20 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டுமெனில் இந்தியா பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம். அத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். பிரதமரின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கனவு திட்டமும் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
மேக் இன் இந்தியா திட்டம் வெளிநாடு வாழ் இந்தியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்து, தொழில் செய்ய வர தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி கனவு கண்டமாதிரி, 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா அடையும் என்பதற்கான நம்பிக்கையை அவரது தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் உருவாக்குகின்றன.

Issues: