20 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டுவது சாத்தியமா?

இந்தியா 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
பிரதமரின் இந்த இலக்கு குறித்து பல்வேறு துறையினரும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் 2 டிரில்லியன் டாலர். இதை 20 டிரில்லியன் டாலராக உயர வேண்டுமெனில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
வரி சீர்திருத்தம், தொழில் புரிவதற்கு உண்டான சூழ்நிலை ஆகியவற்றை செய்வதில் மோடி அரசு வேகம் காட்டி வருவது நாம் அறிந்ததே. எனினும் 20 டிரில்லியன் டாலர் என்ற இலக்கு மிகவும் கடினமானதே.
ஏனெனில் சீர்திருத்தங்கள் மட்டுமே விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது. இக்கருத்தை பிரதமரும் தனது பேச்சில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மேலும் கூறும்போது:
அரசுத் துறைகளின் செயல்பாடு மிகவும் சிக்கலானதாக உள்ளது. செயல்பாடுகளில் வேகம் இல்லை. இதை மாற்றுவது மிகப்பெரிய சவாலான பணி. இதை மாற்றினால்தான் அரசுத் துறை வேகமாகவும், எளிமையாகவும் செயல்படும்.
தொழில் தொடங்க பல கட்ட அனுமதியைக் குறைத்து வருகிறோம். திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறோம். இது திட்டமிடுதலை விடவும், செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்தியாவை மாற்றுவதற்கான அமைப்பு இது.
நிதிப்பற்றாக்குறையை திட்டமிட்ட இலக்கிற்குள் கொண்டு வர அரசு உறுதியாக இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிரதமரின் பேச்சு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அவர் கூறியபடி 20 டிரில்லியன் பொருளா தாரத்தை இந்தியா எட்டினால் அமெரிக்கா வையும் மிஞ்சி இந்தியா உலகளவில் பொரு ளாதார வல்லரசாக திகழும் என்பதில் ஐயமில்லை.

Issues: