இகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்
இந்தியாவில் இகாமர்ஸ் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பல முன்னணி நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் பெருமளவு முதலீடு செய்து வருகின்றன. தற்போது வரை இவ்வர்த்தகத்தில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிற்கு 50 சதவீத வளர்ச்சியை கண்டுவரும் இவ்வர்த்தகத்தின் இந்த ஆண்டின் விற்பனை மதிப்பு ரூ 1 லட்சம் கோடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் செல்போன், கம்ப்யூட்டர் இவற்றின் உபயோகம் பெருமளவு அதிகரித்ததுதான்.
இன்டர்நெட் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என எண்ணும் மனப்போக்கு கொண்டவர்களாக இந்திய மக்கள் மாறிவருகின்றனர். குறிப்பாக இளைஞர்களால் இன்டர்நெட் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழல் உருவாகி விட்டது.
இதை நன்கு உணர்ந்து கொண்ட இகாமர்ஸ் வர்த்தக நிறுவனங்கள், மக்கள் இன்டர்நெட் மூலமாக பொருட்களை வாங்குவதற்கான தூண்டுதலை உருவாக்க பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றன. 60 சதவீத தள்ளுபடி சலுகைகளை கூட வழங்கின.
வீட்டிற்கு வந்து பொருளைக் கொடுத்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும் என்கிற சலுகையை கொடுத்தும் வாடிக்கையாளர்களைப் பிடித்தன. மேலும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பதற்கான புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றன.
இதனால் லேப்டாப், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் இவற்றின் விற்பனை மட்டும், இஷாப்பிங் மூலமாக 45 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
காலணி மற்றும் பெண்களுக்கான ஆபரணங்கள் விற்பனை 24 சதவீதமாக உள்ளது. மேலும் பல்வேறு பொருட்களை ஆன்லைனில் வாங்கும் வசதியை நிறுவனங்கள் ஏற்படுத்தி தந்திருக்கின்றன.
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வசதி வந்தது, ஷோரூம்களுக்கு சென்று நேரத்தை வீணடிக்க விரும்பாதவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
வீட்டில் ஓய்வாக அமர்ந்தபடி நினைத்த நேரத்தில், வேண்டிய பொருட்களை வாங்குவது ஆன்லைனில் மட்டுமே சாத்தியம். எனவேதான் உற்பத்தி செய்பவர்களும் இகாமர்ஸ் வர்த்தகத்தில் நுழைந்து வருகின்றனர்.
மொபைல் ஆப்ஸ் மூலம் விற்பனை
இ-காமர்ஸ் நிறுவனங்கள் தற்போது புதிய உத்தியை கையாளவும் துவங்கியுள்ளன. இணையதளத்தை மூடிவிட்டு, புதிய ஆப்ஸ்களை அறிமுகம் செய்யத் தொடங்கி இருப்பதே அந்தப் புதிய யுக்தி.
இந்த முடிவை நிறுவனங்கள் எடுப்பதற்கு முக்கிய காரணம், ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதுதான்.
சமீபத்தில் இ-காமர்ஸ் நிறுவனமான மிந்த்ரா தனது இணையதளத்தை மூடிவிட்டு, வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஸ்களை கொடுத்து அதன் மூலமாக வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பிளிப்கார்ட் நிறுவனமும் தனது இணையதளத்தை மூடவுள்ளதாக கூறியுள்ளது.
இந்நிறுவனம் தற்போது வாடிக்கையாளர் களுக்கு ஆப்ஸ்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கு 4 கோடிக்கும் அதிகமான பதிவு செய்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
மொபைல் ஆப்ஸ் வழியாக இதுவரை 20கோடிக்கும் அதிகமான பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது.
தினமும் பிளிப்கார்ட்டை கனிணி திரைகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதால், ஷாப்பிங் டிராபிக் அதிகமாகி அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுகிறது. கடந்த ஆண்டைவிட 10 மடங்கு ஆன்லைன் டிராபிக் அதிகரித்துள்ளது.
இத்தகைய பிரச்சனையை சமாளிப்பதற்கு மொபைல் ஆப்ஸ் சிறந்த வழியாக இருப்பதால் இதை நோக்கி இகாமர்ஸ் நிறுவனங்கள் செல்கின்றன.
2020-ம் ஆண்டில் 65 கோடி பேர் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவார்கள் என்று ஆய்வு சொல்கிறது. அப்படி எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இணையதளங்களில் பொருட்களை வாங்கக்கூடிய அனைவருமே ஆன்லைன் வர்த்தகத்தை ஆப்ஸ் மூலமாக செய்ய பழகி இருப்பார்கள் என்று இகாமர்ஸ் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
மக்கள் மொபைல் ஆப்ஸ் மூலம் பர்சேஸ் செய்ய பழகி விட்டால், எப்போதாவது ஆன்லைன் பர்சேஸ் செய்த நிலை மாறி, அடிக்கடி பர்சேஸ் செய்யத் தொடங்குவார்கள். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ்கள் கட்டணமாகும்போது மக்கள் அவதிக்குள்ளாக வாய்ப்புண்டு.
நிறுவனங்களுக்கு இதன் மூலம் தினசரி பொருட்களை விற்கும் விகிதம் அதிகரிக்கும். இது நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்புக்கு வழி வகுக்கும். ஆக மக்களுக்கு செலவு அதிகரிக்கும். நிறுவனங்களுக்கோ வருமானம்
அதிகரிக்கும்.
இகாமர்ஸ் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு
ஆன்லைன் வர்த்தகத்தை சில்லறை வணிகர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எனினும் சில்லறை வணிகர்களும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போது ஆன்லைன் வர்த்தகத்தை புகழ்வர் என்கின்றனர் வணிக ஆலோசகர்கள்.
இந்நிலையில் சமீபத்தில், இந்திய சில்லரை வர்த்தகர் சங்கம், இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்திருந்தது.
‘‘சில்லரை வர்த்தகத்தில் சிங்கிள் பிராண்ட் தயாரிப்புகளுக்கு மட்டும், அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மல்டி பிராண்ட் நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் இப்போது இகாமர்ஸ் மற்றும் எம்காமர்ஸ் முறையிலான வர்த்தகத்தில், இணையதளம் மூலமாக வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அனைத்து தயாரிப்புகளையும் இந்திய சந்தையில் விற்பனை செய்கின்றன.
சில்லரை வர்த்தகத்தில் மல்டி பிராண்ட் ரீடெய்ல் பிரிவில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி இல்லாதபோது, இகாமர்ஸ் பிரிவில் மட்டும் எப்படி அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது’’ என்ற
வாதத்தை முன்வைத்து இந்திய சில்லரை வர்த்தகர் சங்கம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இச்சங்கம் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
“ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இட வசதியோ, தொழிற்சாலையோ, பொருள்களை சேமிக்கும் இடமோ தேவையில்லை. இந்தியாவில் சில்லரை வர்த்தகம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறிய அளவில் மேற்கொள்ளுவதை சில்லரை வர்த்தகம் என வரையறுக்கப் பட்டுள்ளது.
ஆனால் இணையதளம் மூலமும் (இகாமர்ஸ்) மொபைல் போன் மூலமும் (எம்காமர்ஸ்) மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தை சில்லரை வர்த்தகமாக இந்திய சட்டங்கள் குறிப்பிட வில்லை.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியில்லை என்று சட்டம் கூறுகிறது. அதேபோல வெளிநாடுகளில் நிதி திரட்டவும் சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.
ஆனால் இகாமர்ஸ் நிறுவனங்கள் இந்த விதியை மீறி செயல்படுகின்றன. சில்லரை வர்த்தகத்தில் ஒரு தனி பிராண்ட் அல்லது பல பிராண்டுகளை அனுமதிப்பது என்ற கொள்கை முடிவு எடுக்கும் முன்பு, இந்த நிறுவனங்கள் இகாமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடலாமா, கூடாதா என்பதை அரசு தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் ஷக்தார், நான்கு மாதங்களுக்குள் இதற்கு உரிய தீர்வு காணும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பினால் இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடி உண்டாகியிருக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனாலும் இகாமர்ஸ் வர்த்தகத்துக்கு எதிரான முடிவை மத்தியஅரசு எடுக்காது என்றே பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இ காமர்ஸ் துறையை, அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவேதான் வழக்கை பற்றி கவலை கொள்ளாமல் இகாமர்ஸ் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றன.
சகா