வீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்!

கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டை கட்டிப்பார்... என்று நம் பெரியோர்கள் சொன்னார்கள். திருமணம் நடத்துவதும், வீடு கட்டுவதும் மிகவும் சிரமமானது என்னும் அர்த்தத்தை இந்த சொற்றொடர் நமக்கு உணர்த்துகிறது. சிரமப்பட்டு வீடு கட்டுபவர்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
 
கஷ்டப்பட்டு பணம் சேர்த்து கனவு இல்லத்தை கட்ட தொடங்கும் முன், குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி திட்டமிடுங்கள்.
பொருளாதார நிலவரத்தை மனதில் கொண்டு வீட்டுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றும் விதமாக அந்த திட்டமிடுதல் அமைய வேண்டும்.
முதலில் வீடு கட்டும் இடத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் சரிபார்த்து கொள்ள வேண்டும். அதில் வேறு ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்யுங்கள்.
நில வரைபடம் மூலம்  இடத்தின் அளவு, நீளம், அகலம், நான்குபுறங்களின் நிலவரம் போன்றவற்றை நன்கு கவனித்து அதில் எவ்வளவு இடத்தில் வீடு கட்ட போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அந்த இடத்திற்குள்ளேயே எல்லா வசதிகளையும் கொண்ட வீட்டை கட்ட முடியுமா என்பது குறித்து ஆலோசிப்பது அவசியம்.
ஏனெனில் கட்டிடத்தின் அளவு தேவையானதாகவும், போதுமானதாகவும் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொள்ளாமல் தேவைக்கு அதிகமாக கட்டிடங்களை கட்டினால் கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் பெரும் தொகை செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

ஆகையால் முதலிலேயே கட்டிடத்தின் அளவை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பணம் விரயமாவது  தடுக்கப்படுகிறது.
கட்டுமான பணியை தொடங்கிய பிறகு  கட்டிட வடிவமைப்பை (பிளான்) மாற்றக்கூடாது. சிலர் பிளானை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு செய்வதால் பட்ஜெட் அதிகமாகி செலவு தொகை ஜெட்வேகத்தில் எகிறும். காலமும் விரயமாகும்.  

வீடு கட்டும் இடம் தாழ்வான பகுதியில் இருந்தால் அடித்தளத்தை தகுந்த உயரத்திற்கு உயர்த்திவிட வேண்டும்.
மண்ணின் தரத்தை பரிசோதித்து அதற்கேற்ப அடித்தளத்தை அமைத்து கொள்ள வேண்டும். கட்டுமான பணியை தொடங்கும் போதே தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

கட்டுமான பொருட்கள் தேவைக்குகேற்ப  இருப்பு இருக்க வேண்டும். எந்த கட்டுமான பொருளை வாங்கினாலும் தரமான பொருளா என்பதை விசாரித்து வாங்கவேண்டும்.
சிமெண்டை பொறுத்தவரையில் உடனுக்குடன் உபயோகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் சிமெண்டின் இறுக்கம் குறைந்துவிடும்.

கட்டுமான பணியின் போது ஒவ்வொரு கட்டத்திலும் தகுந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
கட்டுமான பொருட்களின் தரம், வலிமை, தொழில்நுட்பம் இவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமெனில், ஏற்கனவே பயன்படுத்தியவர் களிடமும், வல்லுனர்களிடமும் கேட்கலாம்.

ஏழுமலை

 

Issues: