சரக்கு லாரி பெட்டியில் உருவான புதுமை கழிப்பறை

உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்றவற்றை போல, நல்ல கழிவறையும் மக்களின் அடிப்படை தேவையாக உள்ளது. இந்தியாவில் சுமார் 62 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.
50 சதவீத வீடுகளில் கழிப்பறையே இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமங்களிலும், புறநகர் பகுதி களிலும் வாழ்பவர்கள் பெரும்பாலும் திறந்த வெளியைத்தான் கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகி பல்வேறு நோய்களின் பிடியில் அவர்கள் சிக்க நேரிடுகிறது.
பொது கழிப்பிடங்களும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. பொது கழிப்பிடங்களை கட்டுவதற்கு அரசு போதிய நிதியை ஒதுக்குவது இல்லை. அதிக செலவினம் ஏற்படுவதை காரணம் காட்டி பொது கழிப்பிடங்களை தேவையான இடங்களில் அரசு கட்ட முன்வருவதில்லை.
இப்பிரச்சனைக்கு திரைப்பட இயக்குநர் சுரேஷ் மேனன் ஒரு தீர்வை கண்டுள்ளார்.
20 அடி நீளமுள்ள சரக்கு லாரியின் பெட்டிகளை கழிப்பறைகளாகவும், குளியல் அறைகளாகவும் மாற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு தந்திருக்கிறார். இந்த பொதுக்கழிப்பிடத்திற்கு ஆன செலவு ரூ. 7 லட்சம் மட்டுமே.
பயன்படாத ஒரு சரக்கு லாரி பெட்டியை பார்த்திருக்கிறார் சுரேஷ் மேனன். அதை கழிப்பறையாக மாற்ற முடியும் என்ற எண்ணம் அவரது உள்ளுணர்வில் உதித்தது.
ஒரு தொழிற் சாலையில் அதன் வடிவத்தை கழிப்பறைக்கு ஏற்றாற்போல் மாற்றித் தரும்படி கூறியிருக்கிறார். பிறகு தண்ணீர் குழாய்கள், மின்சார வயர்கள் பொருத்தப்பட்டன. அத்துடன் கழிவு நீர் தொட்டிகளும் இணைக்கப்பட்டு கழிப்பறை தயாரானது.
இந்த கழிப்பறை பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. கான்கிரட்டால் கட்டப்படும் கழிப்பறைகள் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும். ஆனால், இந்த சிறப்பு கழிப்பறையை இடம் பெயர்த்து கொண்டு செல்ல முடியும். வேறிடத்திற்கு கொண்டு செல்லும் போது பழுது ஏற்பட்டால் பழுது பார்ப்பதும் சுலபம்.
எனவே, தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் பொது கழப்பிடங்களை காட்டிலும் இந்த சரக்கு பெட்டி கழிப்பறைகள் சிறந்த பயன் அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
அடுத்தக்கட்டமாக சூரிய சக்தி மின்சாரம் கொண்ட விளக்குகளை பயன்படுத்தும் முயற்சியிலும், நீர் தொட்டிகளுக்கு பதிலகாக மறு சுழற்சி முறையில் இயங்கும் கழிவு தொட்டிகளை உருவாக்கும் முயற்சியிலும் சுரேஷ் மேனன் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Issues: