சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா?
இந்தியாவில் அந்நிய நிறுவனங்களும், இந்திய கார்பரேட் நிறுவனங்களும் பிரம்மாண்டமான அளவில் தொழில்கள் மேற்கொண்டாலும், இந்தியாவின் பொருளாதார வளர்சிக்கு பெரும் பங்கை ஆற்றுவது சிறு - குறு தொழில்களே.
சுமார் 70 சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது இந்த சிறு---குறுந் தொழில்களே. இந்த குறுந்தொழில் வளர்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் அளித்தாலும் அவை போதுமானவையாக இல்லை என்பது இத்தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் குமுறலாக உள்ளது.
பல்வேறு இடர்பாடுகளை சிறு-குறு நிறுவன அதிபர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த இடர்பாடுகள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பன குறித்து சற்றி விரிவாக பார்க்கலாம்.
சிறு தொழிலில் ஈடுபட நினைக்கும் தொழில் முனைவோருக்கு பெரும்பாலான வங்கி அதிகாரிகள் கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள். கடன் கொடுக்க வேண்டும் என விதிமுறைகள் இருந்தாலும், வங்கி அதிகாரிகள் கடன் கொடுக்காமல் பொறுப்பை தட்டி கழிக்கின்றனர்.
அசையாச் சொத்துகள் இல்லாத நபர்களுக்கும் கடன் கொடுப்பதற்கு விதிமுறைகள் இருந்தும் வங்கி அதிகாரிகளின் போக்கால் அது நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது.
எனவே வங்கிக்கிளை மேலாளர்களுக்கு தெளிவான வழிமுறைகளையும், விதிமுறைகளையும் மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும் எனவும், வங்கிக் கடன் குறித்த தெளிவான விதிமுறைகளை பொதுமக்கள் அறியுமாறு அரசு விளம்பரப்படுத்தவேண்டும் எனவும் குறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தகுதியுள்ள நபர்களுக்குக் கடன் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அந்நிறுவனங்கள் வற்புறுத்தி உள்ளன. இந்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறு-குறு நிறுவனங்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும். அதன் மூலம் தொழில் வளர்ச்சி பெருகி இன்னும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிறு-குறு தொழில் நிறுவனங்களில் இன்றைக்கு பணி செய்ய திறமையான ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு பெரும் ஊதியத்தை சம்பளமாக அளிக்க வேண்டி உள்ளது. திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், கார்ப்பரேட் நிறுவன தயாரிப்புகளோடு போட்டி போட முடியாத சூழல் உருவாகி உள்ளது. இப்பிரச்சனைக்கு அரசு தீர்வுகாண வேண்டும் என அந்நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
தற்போதைய நிலையில் குறு-சிறு தொழில் பிரிவிற்கான வரையறைகள் நுட்பமாக இல்லை என அந்நிறுவனங்கள் கூறுகின்றன.
ரூ.50 லட்சம் வரை டர்ன்ஓவர் செய்யும் நிறுவனங்கள் குறுந்தொழில் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. ரூ.5 கோடி வரை டர்ன்ஓவர் செய்யும் கம்பெனிகள் சிறுதொழில் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதை இன்னும் விரிவு படுத்தவும், அதிகமான வரிச்சலுகைகளை அளிக்கவும் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
அரசு டெண்டர் வழங்கும் போது சில பெரிய ஆர்டர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே வழங்கும் வகையில் விதிமுறைகள் உள்ளன.
இந்த விதிமுறைகளை தளர்த்தி சிறு-குறு நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என இந்நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அப்படி செய்யும் போது சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அது பேருதவியாக அமையும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களோடு சிறு-குறு தொழில் நிறுவனங்கள் போட்டி போட முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்கும் விலைக்கு சிறு நிறுவனங்களால் விற்பனை செய்ய முடியவில்லை.
இந்த பிரச்சனை தீர்வதற்கு சிறு, குறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக வரிச்சலுகை அளிக்க வேண்டும் என இந்நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்த கோடிகளை வாரி இறைக்கின்றன. சிறு-குறு நிறுவனங்களால் பொருட்களை விளம்பரப்படுத்த பணத்தை செலவிட முடியவில்லை. காரணம் பண பற்றாக்குறை.
இதற்கு அரசு தொலைக்காட்சி, பத்திரிகை, பொது இடங்கள் போன்றவற்றில் மிகவும் குறைந்த கட்டணத்தில், கடனுக்கு விளம்பரம் செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சிறு-குறு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
அரசு நிறுவனங்களிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இ.எஸ்.ஐ., பி.எப்., போன்ற சலுகைகள் வழங்க அரசு உதவி செய்கிறது.
அதைப் போல குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காகவும் இ.எஸ்.ஐ., பி.எப்., போன்ற சலுகைகள் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என குறு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்காக குறிப்பிட்ட சதவிகித தொகையை அரசுக்கு கொடுக்கவும் இந்நிறுவனங்கள் தயாராக உள்ளன.
அரசு விழாக்கள் மற்றும் கண்காட்சிகள் போன்றவை நடக்கும் போது சிறு-குறு நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கு அரசு இலவசமாக அனுமதிக்க வேண்டும் என சிறு-குறு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
நாட்டில் அதிகமான பேருக்கு வேலைவாய்ப்பு களை தரும் சிறு-குறு நிறுவனங்கள் வைக்கும் கோரிக்கை நியாயமானவையாகவே உள்ளன. இக்கோரிக்கைகளை அரசு நடைமுறை படுத்தினால் நாட்டின் தொழில்துறை ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அது பொருளாதார வளர்ச்சியை வேகமாக்கும்.