முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்!

உலக அளவில் முதலீடுகளை ஈர்க்க, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை வருகிற மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழக அரசு சென்னையில் நடத்த உள்ளது.
இதன் மூலம், மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கும் முடியும் என தமிழக அரசு கருதுகிறது.
இம்மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. சில முக்கிய விசயங்களை இம்மாநாட்டில் முதல்வர் குறிப்பிட்டார்.
“கடந்த 1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மாநிலத்தில் போர்டு, ஹூண்டாய் போன்ற சர்வதேச மோட்டார் நிறுவனங்கள் மட்டுமின்றி டிவிஎஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களும் தமிழகத்தில் உற்பத்தி நிலையங்களை தொடங்கின.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் பிடித்துள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மின்னணு உற்பத்தியில் பெரும் புரட்சி ஏற்பட்டது, இதனால் மோட்டோரோலா, ஃபாக்ஸ்கான், டெல், சாம்சங் போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்தன.
தற்போது மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நாட்டிலேயே பெரும் பங்கு வகிக்கிறது. ஜவுளி, தோல், மோட்டார் வாகனங்கள் இவற்றின் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இந்தியாவிலேயே முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது . பொருளாதார, சமூக மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கான அளவீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து உயர்தரத்தில் உள்ளதே இதற்கு காரணம்.
மக்கள் தொகையைப் பொறுத்தவரை இந்திய அளவில் தமிழ்நாடு 6-வது இடத்தில் இருந்தாலும், பொருளாதார முன்னேற்றத்தைப் பொறுத்தவரை 2-வது இடத்தில் உள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட 2012 -& 2013-ம் ஆண்டு தொழில் ஆய்வறிக்கையில், இந்தியாவிலேயே, அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சாலைகள், பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்றன. தொழில் மொத்த மதிப்பீட்டை பொறுத்தவரை சராசரியாக, தமிழகம் 3-வது இடம் வகிக்கிறது.
தமிழகத்தை, முதல் இடத்திற்கு கொண்டு வரும் வகையில், Vision Tamilnadu - 2023 என்னும் கொள்கையை அம்மா அறிமுகப்படுத்தியுள்ளார். இது மேம்பாட்டுக்கான கொள்கைத் திட்டம். தமிழகத்தை வளமான மாநிலமாக முன்னேற்றும் நோக்குடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி 217 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-ம் ஆண்டில், தனிநபர் வருமானத்தை 10 ஆயிரம் அமெரிக்க டாலராக ஆக்குவது இத்திட்டத்தின் நோக்கம்.
கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி அம்மா செயல்படுத்திய ‘தமிழ்நாடு தொழிற்கொள்கை 2014’-ன் மூலம் மிகப்பெரிய அளவில் தொழில்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது.
தானியங்கி, உதிரிபாகங்கள் தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. தொழில்துறையில் பின்தங்கிய தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளால் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அபரிமிதமான தொழிலாளர்கள், தொழில் தொடங்கிட ஏற்ற சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக முன்னேற்றம் கண்டுவரும் தமிழகத்தை வறுமையற்ற மாநிலமாகவும், மனிதவள மேம்பாட்டில் முன்னனி மாநிலமாகவும் ஆக்குகிற நோக்கத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது.
வரவிருக்கும் அனைத்து திட்டங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில், ஒரே மாதத்திற்குள் அனுமதி வழங்கப்படும். அவற்றை முறைப்படுத்த, தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்” என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மின்னணு, உதிரி பொருட்கள், ஜவுளி, உணவுப் பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், மருந்து பொருட்கள், மோட்டார் வாகனங்கள், மோட்டார் உதிரி பாகங்கள், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல், பொறியியல், சிறுதுறைமுகங்கள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மரபுசாரா எரிசக்தி முகமைகள் ஆகியவற்றில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்த மாநாடு வகை செய்யும்.
தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
இதன் மூலம் தமிழகத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

ரமேஷ்

Issues: