குறைந்து வரும் காகிதபண பயன்பாடு

மனிதன் தனது சக மனிதனுக்கு கொடுக்கும் மதிப்பை விட, பணத்துக்கு அதிக மதிப்பு கொடுக்கிறான். இதற்குக் காரணம் பணத்தின் சக்தி. ஒருவன் எவ்வளவு சம்பாதித்திருக்கிறான் என்பதைக் கொண்டே சமூகம் அவனை மதிப்பிடுகிறது.

 இந்தப் பணம் உருவான கதை மிக நீண்டது. பண்டமாற்று முறை தொடங்கி காகிதப் பணம் பயன்பாட்டுக்கு வந்த விதம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.

பண்டங்களையும், சேவைகளையும் மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இணையான மதிப்பாக அரசால் உறுதியளிக் கப்பட்ட அடையாள ஆவணம் என்பதே காகிதப் பணத்துக்கான எளிதான விளக்கம். மன்னராட்சிக் காலத்தில் உலோகங்களால் ஆன நாணயங்களாக வார்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பணம், கால ஓட்டத்தில் காகிதத்திலும் அச்சிடப்பட்டு மக்களிடையே புழக்கத்துக்கு வந்து நீண்டகாலமாக நிலைபெற்றுள்ளது.
பின்னர் காசோலை, கேட்பு வரைவோலை (டிமாண்ட் டிராஃப்ட்), போஸ்டல் ஆர்டர், மணி ஆர்டர் என பணம் பல வடிவங்கள் பெற்றாலும், அவை தொடர்ந்து காகித வடிவிலேயே இருந்தன. பணம், என்றாலே அதற்குக் காகிதம் ஒன்றே வடிவம் என்பது  அனைவரது மனதிலும் இப்போதும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

ஆனால், தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனால் கடந்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்த “பிளாஸ்டிக் கரன்ஸி” என்று அழைக்கப்படும் டெபிட், கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் கார்டு, கிளப் கார்டு, பெட்ரோல் கார்டு, குளோபல் கார்டு உள்ளிட்டவை சர்வதேச அளவில் காகிதப் பணத்தின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கத் தொடங்கின.

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்குமே குறைந்தபட்சம் ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது. சிறு நகரங்களில் உள்ள கடைகளில் கூட ஸ்வைப்பிங் மிஷின்கள் வந்து விட்டன. மணிபர்ஸ்களில் பணம் பிடித்திருந்த இடங்களை டெபிட், கிரெடிட் உள்ளிட்ட கார்டுகள் பிடிக்கத் தொடங்கிவிட்டன.

தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக காகிதப் பணத்தின் பயன்பாட்டை மேலும் குறைக்க வழி செய்திருப்பது எலெக்ட்ரானிக் பணம். மின்னணுத் தொழில்நுட்பம் மூலம் பணத்தை இன்டர்நெட் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளும் முறைதான் இது.

இன்டர்நெட், மொபைல் பேங்கிங் மூலம் பணத்தை நமது வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தவர் கணக்கில் செலுத்துவது, செல்போன் கட்டணம், மின் கட்டணம் முதல் வெளிநாட்டில் இருப்பவர்களுக்குப் பணம் அளிப்பது வரை நமது வங்கிக் கணக்கு மூலம் மின்னணுத் தொழில் நுட்பத்தில் பணப் பரிமாற்றம் செய்து கொள்வது சாத்தியமாகியுள்ளது.

உள்ளங்கையில் இருக்கும் செல்போனை வைத்துக் கொண்டு உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பணத்தை வழங்க முடியும் என்பதை  சில ஆண்டுகளுக்கு முன்புவரை நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது.
நமது பெருநகரங்களில் பணப் பரிமாற்றம் அனைத்துமே மின்னணுப் பரிமாற்றமாகிவிட்ட நிலையில் காகிதப் பணத்தை கையால் தொடாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  விரைவில் சாமானிய மனிதர்கள் மத்தியிலும் காகிதப்பணப் பயன்பாடு பெருமளவில் குறையும் என்பது உறுதி.

பண்டமாற்று முறை காலத்தையும், தற்போதைய காலத்தையும் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் மனிதன் எவ்வளவு முன்னேறி இருக்கிறான் என்பதை உணர முடியும். ஒவ்வொரு காலகட்டமும் மாற்றங்களைச் சந்தித்தே வருகிறது. அத்தவகையில் காகிதப் பணம் பயன் பாடும் முழுமையாக மாற்றமடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கலை

 

Issues: