செய்யும் தொழிலை நேசிப்போம்...
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். இந்த பழமொழியை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை நேசிக்க வேண்டும். உலகில் எந்த தொழிலும் தாழ்வான தொழில் அல்ல. தொழிலே செய்யாமல் சோம்பேறியாக சுற்றிக்கொண்டு இருப்பவன் தான் தாழ்வானவன்.
தொழில் செய்யாதவனை இந்த சமூகம் மதிப்பதில்லை. வேலை செய்பவர்களுக்குத் தான் சமூகம் மரியாதையை தருகிறது. அதிலும் அந்த தொழிலை நேசத்தோடு செய்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதை மிகவும் அதிகம்.
பகவத் கீதையில் கர்மயோகம் என்ற பகுதியில் கிருஷ்ணர் சொன்ன உபதேசம் மிகவும் புகழ் வாய்ந்தது.
சுதந்திர போராட்ட காலகட்டத்தில் தேசத் தந்தை காந்தி, விவேகானந்தர், வினோபாஜி உள்ளிட்ட தேச தலைவர்கள் கீதையின் கர்மயோகபடி வாழ்ந்தனர்.
கர்மயோகம் என்பது செய்யும் தொழிலின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்துவது. கிடைக்கும் பலன்களின் மீது பற்றுகொள்ளாமல் இருப்பது. அதனால்தான் கடமையை செய்.. பலனை எதிர்பாராதே.. என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார்.
நமக்கு ஒரு கேள்வி எழும். பலனை எதிர்பார்க்காமல் எப்படி கடமையை செய்ய முடியும்? பலனின் மீது பற்றுகொள்ளாமல் கடமையை செய்தால்தான் தொழிலை சேத்தோடு செய்ய முடியும் என்கிற கோணத்தில்தான் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தத்துவத்தின்படி தான் மேலே சொன்ன தேச தலைவர்கள் எல்லாம் வாழ்ந்து காட்டினர்.
தொழில் அல்லது வேலை செய்பவர்கள் கூட இந்த தத்துவத்தின்படி செயல்பட்டால் மேன்மை நிலைக்கு செல்வர்.
அதாவது கிடைக்கும் பலன்களின் மீது பற்றுகொள்ளாமல் வேலை செய்வதே கடமை என தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருந்தால் நாம் கேட்காமலேயே செல்வம் நம்மை வந்து சேரும்.
எனவே எந்த தொழிலை செய்தாலும் நேசத்தோடு செய்யுங்கள். வெற்றி தானாக தேடி வரும்.