புற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு! உண்மையா?

புற்று நோய்க்கான மருந்து விலை ரூ.1 லட்சம் வரை உயர்ந்து விட்டதாக கடந்த 2 மாதமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கூற்று உண்மையா என்பது குறித்து பார்ப்போம்.
பிரதமர் மோடி 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற போது அந்நாட்டு மருந்து நிறுவனங்களின் முதலீட்டை கவரவேண்டும் என்பதற்காக, விலை கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து முக்கிய மருந்துகளுக்கு விலக்கு அளித்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.
மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் ‘தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம்’ 1997ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் எவை என்பதை தீர்மானிப்பதும் அவற்றின் விலையை நிர்ணயிப்பதும் இந்த ஆணையத்தின் முக்கிய பணி ஆகும்.
இந்த ஆணையம் மத்திய ரசாயன துறையின் கீழ் வருகிறது. இந்த துறை குறிப்பிட்ட காலங்களில் அத்தியாவசிய மருந்துகள் எவை என்பதை குறித்த பட்டியலை வெளியிடும்.
மருந்து உற்பத்தி நிறுவனங்களும், விற்பனையாளர்களும், தமது விற்பனை குறித்த தகவல்களை இந்த ஆணையத்திடம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அளிக்க வேண்டும். இந்த தகவல்களின் அடிப்படையில் மருந்து விலையில் தலையிடலாமா என்பது குறித்து ஆணையம் தீர்மானிக்கும்.
கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் இந்த ஆணையம் 652 மருந்துகளை அத்யாவசிய மருந்துகள் என அறிவித்தது. இவற்றில் காசநோய்க்கான 6 மருந்துகளும், சர்க்கரை நோய்க்கான 7 மருந்துகளும், புற்று நோய்க்கான 31 மருந்துகளும் அடங்கும்.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இந்த ஆணையம் 2014 ஜூலை மாதத்தில் மேலும் 108 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இணைத்தது. இந்த அறிவிப்புக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன. மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தன.
இந்நிலையில் 2014 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஒரு விளக்கம் அளித்தது. 2014 ஜூலை மாதத்தில் போடப்பட்ட உத்தரவு அப்படியே இருக்கும் என்றும், மேற்கொண்டு உத்தரவுகள் வராது என்றும், ஏற்கெனவே குறைக்கப்பட்ட மருந்துகள் விலை அப்படியே இருக்கும் என்றும் அந்த விளக்கதில் கூறப்பட்டது.
மருந்து கட்டுப்பாட்டு சட்டம் 2013, 19வது பிரிவு படி, அவசர கால நிலையில் ஒரு கம்பெனி, மருந்து விலையை உயர்த்தும் நிலையில் மட்டுமே மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் விலையை கட்டுப்படுத்த முடியும் என சொல்கிறது.
இது ஒருபுறம் இருக்க, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிற அதாவது புற்றுநோய் மருந்து விலை கடுமையாக எகிறிவிட்டதாக சொல்லப்படும் விஷயம் குறித்து பார்ப்போம்:
நிறீவீஸ்மீநீ என்ற புற்றுநோய் மருந்து ரூ.8,500ல் இருந்து ரூ.1,08,000 ஆக ஏறி விட்டதாக சொல்கிறார்கள். உண்மையில் அவ்வளவு விலை ஏறவில்லை. 30 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் விலை ரூ.8,500 கிடையாது. அதனுடைய உண்மையான விலை ரூ.900 மட்டுமே. மொத்தம் 18 கம்பெனிகள் இந்த மருந்தை தயாரிக்கின்றன.
காப்புரிமையால் கட்டுப்படுத்த முடியாத மருந்துகள் ஜெனிரிக் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். அதனால்தான் குறைந்தவிலையான ரூ.900க்கு அந்த மருந்து கிடைத்து வருகிறது.
இந்த நிறீவீஸ்மீநீ என்ற மருந்திற்கு இன்னொரு பின்னணி விஷயமும் உண்டு. இந்த மருந்தை தயாரித்த நோவாட்டிஸ் நிறுவனம், சுப்ரீம் கோர்ட் வரை சென்று காப்புரிமை கேட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட் காப்புரிமை கொடுக்க மறுத்துவிட்டது.
எனவே இது ஜெனிரிக் ஆக விற்கப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனம் தயாரிக்கும் மருந்துதான் ரூ.8,500. அந்த மருந்தை நாம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ரூ.900க்கு கிடைக்கும் மருந்தை வாங்கி பயன்படுத்தலாம். விற்பனை குறையும் போது நிச்சயம் அந்த நிறுவனமும் விலை குறைத்து விற்கும் என்பதில் ஐயமில்லை. தற்போதைய நிலையில் மக்கள், மருந்துவிலையை கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். இதற்கு அரசே மருந்துகளை அதிக அளவில் கொள்முதல் செய்து ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். அப்போது மருந்து நிறுவனங்கள் தங்களது பெரும் லாபத்தை குறைத்து கொண்டு மருந்துகளின் விலையை குறைக்க முன்வரும்.
இந்த அடிப்படையில்தான் தமிழக அரசு அம்மா மருந்தகம் என்ற பெயரில் மொத்தமாக மருந்துகளை கொள்முதல் செய்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நடைமுறையை மத்திய அரசும் பின்பற்ற ஆரம்பிக்கலாம். ஏற்கனவே இந்த நடைமுறையை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக பின்பற்றி வருகிறது.
மருந்துகளை கண்டுபிடிப்பவர்கள் தீவிர ஆராய்ச்சி செய்து ஏராளமான கோடிகளை இறைத்து கண்டுபிடிக்கிறார்கள். அந்த செலவை எல்லாம் ஈடுகட்ட மருந்து விலையில் திணிக்கிறார்கள்.
எனவே இந்த வியாபார யுத்தியை நாம் தவறு என்று சொல்ல முடியாது. வியாபாரம் என்றால் இலாப நோக்கை அடிப்படையாக கொண்டுதான் இருக்கும். எனினும் பெரும் லாபத்தை எதிர்பார்க்காமல் ஓரளவு லாபத்தை அடிப்படையாக கொண்டு மருந்துவிலையை நிர்ணயித்தால்தான் அனைத்து மக்களும் வாங்கி நுகரமுடியும். மோடி அமெரிக்கா சென்ற போது, அமெரிக்க மருந்து நிறுவனங்கள் எதுவும் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய மருந்து நிறுவனங்கள் மட்டும்தான் இந்தியாவில் தொழில் தொடங்க முன் வந்துள்ளன.

Issues: