அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்வு... காப்பீட்டு துறை வளர்ச்சி காணுமா?

தனிநபர் சேமிப்பில் உலக அளவில் இந்தியாதான், முதன்மையான நாடு. வங்கி, தங்கம், நிலம் போன்றவற்றில் சேமிப்பு
செய்யும் மக்கள் காப்பீட்டிலும் பணத்தை சேமிக்கின்றனர்.

காப்பீட்டுத் துறையைப் பொறுத்தவரை தனியார் நிறுவனங்களைவிட பொதுத்துறை நிறுவனமான எல்ஐசிதான் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளது.

இந்நிலையில் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக மத்தியஅரசால் உயர்த்தப்
பட்டுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு காப்பீட்டு துறையில், அந்நிய முதலீடு, 26 சதவீதமாக அதிகரிக்கபட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி, நெதர்லாந்தின் ஐ.என்.ஜி., போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்தன.

ஆனால் இந்த அந்நிய நிறுவனங்கள் 10 ஆண்டுகள் கூட நீடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் 49 சதவீத உயர்வு எந்த அளவுக்கு
பயன் தரும் என்று தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒரு விசயத்தைப் பார்ப்போம். ஒரு அந்நிய நிறுவனம் 1000 கோடி டாலரை காப்பீட்டு துறையில் முதலீடு செய்தால், அந்தத்
தொகை அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அப்படியே இருக்கும்.

அதேபோல காப்பீடு செய்பவர்களின் தொகையும் அந்நிறுவனத்தின் கணக்கில்தான் ஏறும். பின்னொரு நாளில் காப்பீடு செய்தவருக்கு
இழப்பு ஏற்பட்டால் அவரால் காப்பீடு செய்யப்பட்ட தொகையிலிருந்தே நிறுவனம் இழப்பீட்டைக் கொடுக்க முடியும்.

அப்படியிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு நமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல்
இல்லை.

57 ஆண்டுகள் கடந்துள்ள பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சொத்து மதிப்பு, இன்றைய தேதியில் பல லட்சம்
கோடிகளைத் தாண்டிவிட்டது.

மின்சாரத் துறைக்கு முதலீட்டுத் தொகையாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 450 கோடி ரூபாயை எல்.ஐ.சி. தான் அளித்துள்ளது. தங்களது 10ஆயிரம் கோடி ரூபாய்த் தேவைக்கு எல்.ஐ.சி.யையே நம்புவதாக இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவரே கூறியிருக்கிறார்.

இந்திய ரயில்வே நிதிக் கழகத்தின் சொத்துகளில் எல்.ஐ.சி. பெருமளவு முதலீடு செய்துள்ளது. இப்படி ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு ஜீவஊற்றாக பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் போது அந்நிய முதலீட்டுக்காக மத்திய அரசு ஏன் அலைய வேண்டும் என்ற கேள்வியையும் அக்கட்சிகள் முன் வைக்கின்றன.

‘காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும்போது, இந்தியாவிற்குள். ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி வரை அந்நிய முதலீடு வரும் என்றும், அந்நிய நிறுவனங்கள் அந்நாட்டு சேமிப்பை எல்லாம் இந்தியாவிற்கு கொண்டு வந்து இந்தியாவை வளப்படுத்துவார்கள் என்றும் அன்றைய வாஜ்பாய் அரசு கூறியது.

ஆனால் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் வெறும் ரூ.7 ஆயிரத்து 632 கோடிதான் வந்துள்ளது. தற்போதைய வரம்பான 26 சதவீதம் அளவிற்கு கூட அந்நிய முதலீடு வரவில்லை.

இந்த 13 ஆண்டுகளில் அரசின் லாப பங்காக எல்ஐசி வழங்கியது மட்டுமே ரூ.10223.84 கோடியாகும்.

கடந்த நிதியாண்டின் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் 84.4 சதவீதத்தை எல்.ஐ.சி. மட்டுமே செய்துள்ளது. 23 தனியார் நிறுவனங்கள் சேர்ந்து வெறும் 15.6 சதவீத வணிகத்தை மட்டுமே செய்ய முடிந்துள்ளது.

எனவே அந்நிய முதலீட்டை உயர்த்தினால் தான் காப்பீட்டு துறை வளரும் என்று அரசால் கூறப்படுவது உண்மை யல்ல’என்று இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை விற்பதிலும், பாலிசிதாரர்களை தொடர்ந்து தக்கவைத்துகொள்வதிலும் எல்.ஐ.சி.யே முதல் இடத்தில் உள்ளது.

எல்.ஐ.சி தனது பாலிசிதாரர் களில் 98% பேருக்கு காப்பீட்டு தொகையை வழங்கி உள்ளது. ஆனால் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் பாலிசிதாரர்களில் 88% பேருக்கு மட்டுமே காப்பீட்டு தொகையை வழங்கியுள்ளன. மறுக்கப்பட்ட காப்பீட்டு சதவிகிதமும் தனியார்
துறையில் அதிகம்.

இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அந் நி ய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது சரியா என்ற பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களின் கேள்வியில் நியாயம் இருக்கவே செய்கிறது.

அருள்

Issues: