வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’

தமிழகத்தில் 9.68 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு & சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களிலும் புதிதாக ஏற்படுத்தப்படும் நிறுவனங்களிலும் சிறப்பான மனித ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக தமிழக அரசால் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’ தொடங்கப் பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 25,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். 18 முதல் 25 வயது வரை உள்ள பொறியியல்,
தொழிற்கல்வியியல், தொழில் பட்டயபடிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய 6 மாத பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சியானது சிறு & குறு & நடுத்தர தொழில் நிறுவனங்களில் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தொழில் நிறுவனங்கள் மாதம் ரூ. 15,000 உதவி தொகையாக வழங்கும். பயிற்சி முடிந்தவுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ. 12,000த்தை அரசு வழங்கும்.
பயிற்சி பெற்றவர்களின் திறமையின் அடிப்படையில் தேசிய மேம்பாட்டுக்கழகம் சான்றிதழ்களை வழங்கும். இத்திட்டத்தில் மகளிருக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழக அரசின் இந்த திட்டம் பொறியியல் மாணவர்களுக்கும், தொழிற்கல்வி மாணவர் களுக்கும் மிகுந்த நன்மைபயக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நம்மிடம் பேசிய பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர் கூறியதாவது:
இன்றைக்கு பொறியியல் படித்தால் வேலை உறுதி என்பது நிச்சயம் இல்லாத சூழல் நிலவி வருகிறது. வருடத்திற்கு தமிழகத்தில் 2 லட்சம் பொறியாளர்கள் படித்துவிட்டு வருகின்றனர். இவர்களில் 20 சதவீதம் பேருக்குதான் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மீதம் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமலும், படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலையிலும் இருக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசின் ‘அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’ எங்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

Issues: