பாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்

பங்குச்சந்தை, மியுச்சுவல் பண்ட்ஸ், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யும் போக்கு இந்திய மக்களிடம் அதிகரித்து வந்தாலும், வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களே இந்தியாவில் அதிகம்.
ஏனெனில் இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். பாதுகாப்பும், உறுதியாக கிடைக்கும் வட்டி வருவாயும் இதனை நோக்கி மக்களை ஈர்க்கிறது. பங்குச்சந்தையில் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் சிறந்தது.
1 லட்ச ரூபாய்க்கு மேல் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், தொகையை பல்வேறு வங்கியில் பிரித்து முதலீடு செய்வது சிறந்தது. ஏனெனில் ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, வங்கியில் 1 லட்சம் ரூபாய் வரை வைக்கப்படும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு மட்டுமே காப்பீடு உள்ளது.
சில தனியார் நிறுவனங்களும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை செயல்படுத்துகின்றன. வங்கி பிக்சட் டெபாசிட்களை காட்டிலும் அதிக வட்டி விகிதத்தை நிறுவன பிக்சட் டெபாசிட் திட்டம் அளிக்கிறது. எனினும் நிறுவன பிக்சட் டெபாசிட்களில் இடர்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் ஆண்டின் டெபாசிட் வட்டி வருமானம் ரூ.10ஆயிரத்தை தாண்டினால், வங்கிகள் அதற்கு ஜிஞிஷி பிடித்தம் செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அதிக வரி கட்டுவதை தவிர்த்து சேமிக்க விரும்பினால், குடும்பத்தில் வேலையில் இல்லாத மற்ற நபர்களின் பெயரில் பிக்சட் டெபாசிட்டை போடலாம்.
வங்கி பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டியாக கணக்கிடப்படுகிறது.
வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், அசல் தொகை குறிப்பிட்ட காலம் வரை முடக்கப்படும். இது வங்கி பிக்சட் டெபாசிட்டில் இருக்கும் முக்கிய இடர்பாடு ஆகும்.
முதிர்வு காலத்திற்கு முன்பே வைப்புநிதியை எடுப்பதற்கு வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. எனவேதான் அதிக வட்டி விகிதத்தில் குறைந்த காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது என முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

Issues: