உயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...

உலக வர்த்தக அமைப்பின் சார்பில், சேவைக்கான பொது ஒப்பந்தத்தின்படி உயர் கல்வியில் வெளிநாட்டு கல்வி  நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக வர்த்த அமைப்பின் மாநாட்டில் ஒப்பந்தமாக நிறைவேற உள்ளது.

எனவேதான்  மத்தியஅரசு உயர்கல்வி துறையில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையும், பல்கலைக்கழகங்களையும் அனுமதிக்க தீர்மானித்து,  இதற்கான வழிமுறைகளை வகுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.  மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கல்வியாளர்களும், சமூகநல ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம்  சமூகநல ஆர்வலர்கள், உயர் கல்வி துறையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்க கூடாது என்றும், அப்படி ஒப்புதல் கொடுத்தால் நமது நாட்டின் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதுடன் ஏழை மாணவர்கள் கல்வி கற்கமுடியாத நிலை ஏற்படும் என்றும்,  எனவே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கூறி மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனுவை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதாக தமிழக ஆளுநர் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக வர்த்த அமைப்பின் மாநாட்டில் இந்தியா வழங்கியுள்ள ஒப்புதலானது,  ஒப்பந்தமாக நிறைவேறினால், உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 160 நாடுகளை சேர்ந்த கல்வி  நிறுவனங்களும் இந்தியாவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தொடங்கக் கூடிய சூழல் உருவாகும்.
இந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் நிச்சயமாக சேவை நோக்கத்தில் செயல்படாது. வர்த்தக நோக்கமே அதன் பிரதான அம்சம் ஆகும். இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களே கட்டண கொள்ளையில் ஈடுபடும்போது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் சும்மா இருக்குமா?

தற்போதைய சூழ்நிலையிலேயே ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகவும் போராட வேண்டியிருக்கிறது.  நிலைமை இவ்வாறு இருக்க,  வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கு நுழைந்தால், பணம் இருந்தால் மட்டுமே உயர் கல்வி பெற முடியும் என்ற நிலை உருவாகி விடும்.  அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும். கல்வி முழுமையான ஒரு வணிக கட்டமைப்புக்குள் வந்து விடும். ஏழைகளால் கல்வியை கனவில் மட்டுமே காணமுடியும் என்கிற நிலை ஏற்படும்.  

தற்போது இந்தியாவில் கல்வி உதவிதொகை,  மானியம், இடஒதுக்கீடு போன்ற அம்சங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த அம்சங்கள் இருப்பதால்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்களில் சிலர் உயர்கல்வியைப் பெற்று வாழ்வின் உயர் நிலைக்கு செல்ல முடிகிறது. இவையெல்லாம் காணாமல் போகக்கூடிய நிலையைத்தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும்.
கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு விட்ட நிலையில், கல்வித்துறையில் அனுமதிக்கப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான கதவையும் மத்தியஅரசு திறந்துவிட தீர்மானித்துள்ளது.

அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கு வந்தால் கல்வியின் தரம் சர்வதேச தரத்துக்கு உயரும் என்று சில கல்வியாளர்கள் கூறுகின்றனர். இப்படித்தான் ஆங்கில ஆட்சியாளர்களும் சொல்லி இந்தியாவில் மனப்பாட கல்வி முறையை திணித்துவிட்டு சென்றார்கள்.  

அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் இங்கு வந்தால் கல்வித்தரம் உயரும் என்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. மாறாக கலாச்சார சீர்கேட்டை உருவாக்குவதற்கே அது வழிவகுக்கும். வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு எவ்வளவோ கலாச்சார சீர்கேடுகள் நிகழ்ந்து வருவதைக் காண்கிறோம்.  கல்விக்கூடங்கள் வாயிலாகவும் அந்த கலாச்சார சீர்கேடுகள் வரவேண்டும் என்பதைத்தான் ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களா?

இந்த ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பொதுமக்களுக்கு வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வில்லை. மத்திய அரசு நினைத்தால் ஒப்புதலை திரும்ப பெற முடியும்.
ஆனால் ஒப்புதல் ஒப்பந்தமாக நிறைவேற்றப்பட்டு விட்டால், அதை திரும்ப பெற முடியாது. எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டு ஒப்புதலை திரும்பப்பெற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கலை

 

Issues: